Tuesday 31 January 2017

கங்கைக்குமா ரகசியங்கள் !!

#avalvikatanchallege  #Book1

#கங்கைக்கரை_ரகசியங்கள்

இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த  இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !

கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !

யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?

பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்  !   பயணக்கட்டுரைகளில் சில ,
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில  பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள்.
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?

மேலே படிங்களேன் !

இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.

காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள்
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.

கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !

கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.

காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !

ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப்பெற்றுத்தருகிறார்.

காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரதுப்பார்வையில் அவர்  மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!

எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.

3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்‌ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !

குளித்து எழுகிறோம் !

காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!

அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !

ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.

பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்

மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .

சார நாத் அடுத்து புத்த கயா..!

சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள்,
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில்  அள்ளித் தருகிறார்.

புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!

நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது! 

கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!

கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !

மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!

கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !

வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.

இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக  தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.

அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !

ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !

கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .

அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !

கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !

கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.