Monday 11 April 2016

மனமும் சிறைப்படுகிறது இந்த சிறையில் ..யாரால் !!

காட்சிகளும் , எழுத்துக்களுக்கும் ஒரு தனி சக்தி உண்டு, அதில் ஆர் .சி .சக்தியின் படைப்பும் ஒன்று !
அது நம்மை வேறு உலகம் கொண்டு சென்று வாழ வைப்பது !
அப்படி மனதில் வாழ்ந்த பல திரைப்படங்கள் விதைக்கும் தாக்கம் பல நாள் நீடிக்கும் !
நேற்று பார்த்த " சிறை " திரைப்படம் அந்த வரிசையில் முதலிடம் பெற்று , உயிர் மூச்சு உள்ளிருந்து உணர்த்துவதுப்போல, உள்ளேயே நினைவுகளை வளர்த்து , இங்கும் எழுத வைத்துள்ளது !



அனுராதா ரமணின் கதை , எம் எஸ் வி இசையில் வாணிஜி பாடிய நான் பாடிக்கொண்டே இருப்பேன் பாடல் , இந்தப்படம் பார்க்க தந்த உந்துதல்கள்.
ஒரு அக்ரஹாரத்தில் , சமஸ்கிருத பண்டிதரான, குருக்கள் , பிரசன்னா,
மனைவி பாகீரதீ யாக லஷ்மி , அதே தெருவில் வசிக்கும் அந்தோணி சாமியாக ராஜேஷ் !
இன்று இருப்பது போல் அத்தனை மேக்கப் வகையறாக்கள் இல்லாத காலம் , பளிச்சென்று துடைத்து வைத்த வெள்ளிக்குத்து விளக்காக லஷ்மி ஆரம்பத்திலேயே நம்மை வசீகரித்து அவர் பால் இழுத்து விடுகிறார்.
அத்தனை அன்னியோன்னியமான தம்பதிகளுக்கிடையே , ராஜேஷ் தீரா மோகம் கொண்டு லஷ்மி பலவந்தப்படுத்திட அதை பார்த்தப்படி கோவிலிருந்து வந்திடும் கணவன்.
முதுகுத்தண்டு சிலிர்த்திடும் காட்சிகள் !
கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணன் பாதம் வரைந்த வீட்டில் காமுகன் கால் படுதல் , சிதைந்த பெண்மையுடன் லஷ்மி கதறும் காட்சியில் கண்கள் குளமாகி , அதிர்ச்சியில் உறைந்த பிரசன்னா மனைவியை ஒதுக்கி வெளித்தள்ளுகிறார்.
அதோடில்லாமல்..இரவோடு இரவாக வீட்டைப்பூட்டிக்கொண்டு போக , போக்கிடம் (அவருக்கு வறுமை நிறைந்த
பிறந்த வீடும் முந்தைய காட்சிகளில் தரப்பட) இல்லா மனைவி , மாற்றுப்புடவை ஒன்றுடன் மேடு , மரம் , கோவில் மண்டபம் என அந்தக்கிராம்த்திலேயே சுற்றித்திரிகிறார்.
பார்க்கும் நமக்கு என்ன பாவம் செய்தது பெண் ஜென்மம் என்ற பலத்த சிந்தனை !

அவர் சாக எத்தனிக்கும் வேளையில் நேர்மையான ஏட்டையாவின் மூலம் நிர்மூலமாக்கிய அந்தோணி சாமியிடமே ஒரு வழி கேள் என அறிவுறுத்தப்பட ,
"கோர்ட் , கேஸ் , போலீஸ் ஸ்டேஷன் ந்னு என்னால் அலைய முடியாது..
ஆனால் நா இனிமே இங்க தான் , உன் கண் முன்னாடியே இருப்பேன் !
எந்த உடம்பப்பார்த்து நீ அசப்பட்டியோ அதே உடம்போட உன் கண் முன்னாடியே உலாத்திண்டு இருப்பேன் , உன் விரல் கூட என் மேல் பட முடியாது ! அழகான பொண்ணத்தானே பாத்திருக்க ! அழகான பொணத்தப்பாத்ததில்லயே !!
அப்ப பாப்ப "
என்று கர்ஜித்தவாறே , ராஜேஷின் வீட்டுக்குள்ளயே ஒரு அறையில் சிறை வாசம் மேற்கொள்கிறார் லஷ்மி. எத்தனை திடமான காட்சி !
திகைத்த அந்தோணி , மெல்ல மெல்ல தனது கெட்டப்பழக்கங்களை குறைத்துக்கொண்டும் , லஷ்மிக்கு வேண்டிய உணவு , உடை வசதி செய்து தருகிறார்.
ஊரே ஏசுகிறது !
என்ன ஒரு கதையமைப்பு ! ஒரு கிராமத்தில் ஒரு பெண் சீரழிக்கப்பட்டும் , நிராதவாக நிறுத்தி வைக்கப்பட்டும், இழிச்சொல்லுக்கு பஞ்சம் இல்லை என்ற காட்சியமையப்புகள் !
பல நாட்கள் பட்டினியில் பிரெட் சாப்பிடும் காட்சியில் லஷ்மியின் நடிப்பில் .... அழகை காற்றாறாக உருவெடுப்பதை கைகளால் அணைப்போட்டு தடுக்கமுடிவதில்லை !
மனம் மாறும் ராஜேஷ் , பக்கவாதத்தில் விழுந்தும் , லஷ்மியின் அறைக்கு வெளியே காவலாக கட்டிலோடு கிடக்க , குருக்களையும் தேடி அலைகிறார் அந்தோணியின் உதவியாள் மருது !
அந்தோணி யின் உயிர் பிரிய லஷ்மி படும் பாடு , உணர்ந்து வரும் கணவர் , " என்னுடன் வா , நீயில்லாமல் நானும் கஷ்டந்தான் படறேன்" என..
"இப்பவும் நீ கஷ்டப்பட்டுட்டியே , உன்னை வாழவைக்கிறேன் ந்னு சொல்லாமல் , என் , நான் தான் உங்களுக்கு முக்கியமா படறதா !
பல தடவை சந்தோஷமா இருந்த நீங்கள் உதறிட்டு போயிட்டேள் , ஒரு தரம் செஞ்ச தப்புக்காக அவன் ஆயுசுக்கும் எனக்கு காவலா இருந்திருக்கான் , சுய நலவாதியான உங்களுக்கு பொண்டாட்டியா வாழறத விட , அவனோட விதவையா இருந்துடறேன் "
தாலியை வீசி படத்தை முடிக்கிறார் இயக்குனர் RC சக்தி !
பெருந்தாக்கம் ஏற்படக்காரணம் லஷ்மியின் உயிரோட்டமான நடிப்பு , பிரசன்னா கனகச்சிதமாக பொருந்திப்போகிறார் அவரது கேரக்டரில்!
முதலில் கொடூரமாக பயமுறுத்திட நடிக்கும் ராஜேஷ் பொருந்தாமல், இறுதியில் உன் வாழ்க்கையை கெடுத்த பாவிம்மா,.எனும் காட்சியில்..இத்தனை அப்பாவிக்காரரை அ நியாயமாக வில்லனாக்கிட்டாங்களே ந்னு யோசிக்கவைக்கிறது ! பின்னணி இசை , கதை நகர்த்தலுக்காக பாண்டியன் -இளவரசி காதல் ஜோடி காட்சிகள் படத்திற்கு உதவியிருக்கின்றன.
சிறை யில் பாகீரதி ..
என்றும் நம் மனச்சிறையில் வாழ்கிறாள் .

No comments:

Post a Comment