Saturday 23 April 2016

எந்த கைங்கர்யமும் செய்ததில்லை ஆனால் அரங்கன் எனக்கு இரங்கினான் - தொண்டரடிபொடியாழ்வார்

தமிழ் இலக்கியங்களில்.. வைணவ பக்தி இலக்கியங்களை வெவ்வேறு கால கட்டங்களில் தந்தவர்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்படுகின்றனர்.


அவர்கள் திருமால்.. மஹா விஷ்ணுவை தொழுது பாடிய பாடல்கள் பாசுரங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்.

அதில் திருமாலை என்பது , தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய 45 பாசுரங்களைக்கொண்டது. 

விப்ர நாராயணன் என்ற இயற்பெயர் கொண்டவர் , சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் பிறந்தவர் , திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கன்..பெரியபெருமாளைப்போற்றி..பாடியுள்ளார் இதில்.

முதலில்..இறை நாமத்தை சொல்வதன் பெருமையையும் பக்தியையும் கூறிவந்தவர் , பின் ஏன் பக்தி கொள்ள வேண்டும்.எதனால்..தனக்கு அரங்கன் அருள் செய்தார் என தன்னை தாழ்த்திக்கொண்டு பாடியுள்ளார் .



இனி பாசுரம் காண்போம்.

திருமாலை -17.

விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றுமில்லை
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம்
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணினை களிக்குமாறே !!
---**---
விரும்பி நின்று ஏத்தமாட்டேன் - மிகுந்த அன்புடன் , பக்தியுடன் ஒரு முகப்பட்டு உன்னை ஸ்தோத்திரம் செய்ததில்லை
விதியிலேன் - விதி(கை கூப்பியதில்லை) கை கூப்பி தொழுததில்லை.
மதியொன்றுமில்லை - இறைவன் என்று ஒருவன் உள்ளான் என்ற ஞானம் இருந்ததில்லை.
இரும்பு போல் வலிய நெஞ்சம் - இரும்பினைப்போல வலிய நெஞ்சம்.
இறையிறை - சிறிது சிறிதாக
உருகும்வண்ணம் - உருகிடும் வண்ணம்
சுரும்பமர்சோலை சூழ்ந்த - சுரும்புகள் - வண்டுகள் வந்து அமரும் சோலைகள் சூழ்ந்த
அரங்கமாகோயில்கொண்ட - பெரிய கோயிலைக்கொண்ட அரங்கம்..திருவரங்கம்
கரும்பினைக்கண்ட -கரும்பாகிய பெருமானைக்கண்டு கொண்டு
என் கண்ணினை - எனது இரண்டு கண்களுமே
களிக்குமாறே - ஆனந்தப்படுகின்றன.
பாசுரவிளக்கம் :
இதுவரை பாடல்கள் திருமாலில் மேல் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றை மிக்க பக்தியுடன் , மனம் ஒருமுகப்பட்டு , விரும்பி நின்று பாடியதில்லை.
கைகளைக்கூப்பி தொழுததோ , கைகளால் இறைவனுக்கு சேவகம் செய்ததோ இல்லை.
இறைவன் ஒருவன் தான் அவன் மட்டுமே அனைத்திலும் ஆனவன் , நிரந்தரன் என்ற இந்த ஞானம் இருந்தது இல்லை.
இரும்புப் போல கடுமையான வலிமையான..(இறைவனை நினைக்காமல் இருக்கும் கடுமையான நெஞ்சம்.மனம்) நெஞ்சத்துடன் இருந்துள்ளேன்.
இரும்பைக்கூட நெருப்பிலிட்டு உருக்கிடலாம்.ஆனால் என் மனதை அப்படி உருக்க இயலவில்லை.கடுமையாக இறைவனின் நினைப்பு இன்றி இருந்தேன்.
அப்படி இருந்த என்னை , சிறிது சிறிதாக உருகிடும் விதம் , வண்டுகள் ரீங்காரமிட்டபடி சூழ்ந்துள்ள சோலைகள் கொண்ட திருவரங்கத்தில் , (பெரிய கோயில் கொண்டுள்ள அரங்கன்/கரும்பாகி ) இரும்பான மனதை உருக்கி தன்பால் அன்பினை பெருக வைத்த கரும்பினைப் போல உள்ள அரங்கனை என்னுடைய இரண்டு கண்கள் கண்டு ஆனந்தத்தில் களிக்கின்றன.
எத்தனை தூரம் திருமாலை விட்டு விலகியிருந்தேன்..தனது அழகினைக்காட்டி
என்னை பக்தியால் ஆட்கொண்டது அரங்கன் !
என தொண்டரடிப்பொடியாழ்வார் உருகிப்பாடியுள்ள இன்னொரு பாசுரம் இது !!
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப் பாசுரம் காண்போம்.


smile emoticon

Monday 11 April 2016

மனமும் சிறைப்படுகிறது இந்த சிறையில் ..யாரால் !!

காட்சிகளும் , எழுத்துக்களுக்கும் ஒரு தனி சக்தி உண்டு, அதில் ஆர் .சி .சக்தியின் படைப்பும் ஒன்று !
அது நம்மை வேறு உலகம் கொண்டு சென்று வாழ வைப்பது !
அப்படி மனதில் வாழ்ந்த பல திரைப்படங்கள் விதைக்கும் தாக்கம் பல நாள் நீடிக்கும் !
நேற்று பார்த்த " சிறை " திரைப்படம் அந்த வரிசையில் முதலிடம் பெற்று , உயிர் மூச்சு உள்ளிருந்து உணர்த்துவதுப்போல, உள்ளேயே நினைவுகளை வளர்த்து , இங்கும் எழுத வைத்துள்ளது !



அனுராதா ரமணின் கதை , எம் எஸ் வி இசையில் வாணிஜி பாடிய நான் பாடிக்கொண்டே இருப்பேன் பாடல் , இந்தப்படம் பார்க்க தந்த உந்துதல்கள்.
ஒரு அக்ரஹாரத்தில் , சமஸ்கிருத பண்டிதரான, குருக்கள் , பிரசன்னா,
மனைவி பாகீரதீ யாக லஷ்மி , அதே தெருவில் வசிக்கும் அந்தோணி சாமியாக ராஜேஷ் !
இன்று இருப்பது போல் அத்தனை மேக்கப் வகையறாக்கள் இல்லாத காலம் , பளிச்சென்று துடைத்து வைத்த வெள்ளிக்குத்து விளக்காக லஷ்மி ஆரம்பத்திலேயே நம்மை வசீகரித்து அவர் பால் இழுத்து விடுகிறார்.
அத்தனை அன்னியோன்னியமான தம்பதிகளுக்கிடையே , ராஜேஷ் தீரா மோகம் கொண்டு லஷ்மி பலவந்தப்படுத்திட அதை பார்த்தப்படி கோவிலிருந்து வந்திடும் கணவன்.
முதுகுத்தண்டு சிலிர்த்திடும் காட்சிகள் !
கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணன் பாதம் வரைந்த வீட்டில் காமுகன் கால் படுதல் , சிதைந்த பெண்மையுடன் லஷ்மி கதறும் காட்சியில் கண்கள் குளமாகி , அதிர்ச்சியில் உறைந்த பிரசன்னா மனைவியை ஒதுக்கி வெளித்தள்ளுகிறார்.
அதோடில்லாமல்..இரவோடு இரவாக வீட்டைப்பூட்டிக்கொண்டு போக , போக்கிடம் (அவருக்கு வறுமை நிறைந்த
பிறந்த வீடும் முந்தைய காட்சிகளில் தரப்பட) இல்லா மனைவி , மாற்றுப்புடவை ஒன்றுடன் மேடு , மரம் , கோவில் மண்டபம் என அந்தக்கிராம்த்திலேயே சுற்றித்திரிகிறார்.
பார்க்கும் நமக்கு என்ன பாவம் செய்தது பெண் ஜென்மம் என்ற பலத்த சிந்தனை !

அவர் சாக எத்தனிக்கும் வேளையில் நேர்மையான ஏட்டையாவின் மூலம் நிர்மூலமாக்கிய அந்தோணி சாமியிடமே ஒரு வழி கேள் என அறிவுறுத்தப்பட ,
"கோர்ட் , கேஸ் , போலீஸ் ஸ்டேஷன் ந்னு என்னால் அலைய முடியாது..
ஆனால் நா இனிமே இங்க தான் , உன் கண் முன்னாடியே இருப்பேன் !
எந்த உடம்பப்பார்த்து நீ அசப்பட்டியோ அதே உடம்போட உன் கண் முன்னாடியே உலாத்திண்டு இருப்பேன் , உன் விரல் கூட என் மேல் பட முடியாது ! அழகான பொண்ணத்தானே பாத்திருக்க ! அழகான பொணத்தப்பாத்ததில்லயே !!
அப்ப பாப்ப "
என்று கர்ஜித்தவாறே , ராஜேஷின் வீட்டுக்குள்ளயே ஒரு அறையில் சிறை வாசம் மேற்கொள்கிறார் லஷ்மி. எத்தனை திடமான காட்சி !
திகைத்த அந்தோணி , மெல்ல மெல்ல தனது கெட்டப்பழக்கங்களை குறைத்துக்கொண்டும் , லஷ்மிக்கு வேண்டிய உணவு , உடை வசதி செய்து தருகிறார்.
ஊரே ஏசுகிறது !
என்ன ஒரு கதையமைப்பு ! ஒரு கிராமத்தில் ஒரு பெண் சீரழிக்கப்பட்டும் , நிராதவாக நிறுத்தி வைக்கப்பட்டும், இழிச்சொல்லுக்கு பஞ்சம் இல்லை என்ற காட்சியமையப்புகள் !
பல நாட்கள் பட்டினியில் பிரெட் சாப்பிடும் காட்சியில் லஷ்மியின் நடிப்பில் .... அழகை காற்றாறாக உருவெடுப்பதை கைகளால் அணைப்போட்டு தடுக்கமுடிவதில்லை !
மனம் மாறும் ராஜேஷ் , பக்கவாதத்தில் விழுந்தும் , லஷ்மியின் அறைக்கு வெளியே காவலாக கட்டிலோடு கிடக்க , குருக்களையும் தேடி அலைகிறார் அந்தோணியின் உதவியாள் மருது !
அந்தோணி யின் உயிர் பிரிய லஷ்மி படும் பாடு , உணர்ந்து வரும் கணவர் , " என்னுடன் வா , நீயில்லாமல் நானும் கஷ்டந்தான் படறேன்" என..
"இப்பவும் நீ கஷ்டப்பட்டுட்டியே , உன்னை வாழவைக்கிறேன் ந்னு சொல்லாமல் , என் , நான் தான் உங்களுக்கு முக்கியமா படறதா !
பல தடவை சந்தோஷமா இருந்த நீங்கள் உதறிட்டு போயிட்டேள் , ஒரு தரம் செஞ்ச தப்புக்காக அவன் ஆயுசுக்கும் எனக்கு காவலா இருந்திருக்கான் , சுய நலவாதியான உங்களுக்கு பொண்டாட்டியா வாழறத விட , அவனோட விதவையா இருந்துடறேன் "
தாலியை வீசி படத்தை முடிக்கிறார் இயக்குனர் RC சக்தி !
பெருந்தாக்கம் ஏற்படக்காரணம் லஷ்மியின் உயிரோட்டமான நடிப்பு , பிரசன்னா கனகச்சிதமாக பொருந்திப்போகிறார் அவரது கேரக்டரில்!
முதலில் கொடூரமாக பயமுறுத்திட நடிக்கும் ராஜேஷ் பொருந்தாமல், இறுதியில் உன் வாழ்க்கையை கெடுத்த பாவிம்மா,.எனும் காட்சியில்..இத்தனை அப்பாவிக்காரரை அ நியாயமாக வில்லனாக்கிட்டாங்களே ந்னு யோசிக்கவைக்கிறது ! பின்னணி இசை , கதை நகர்த்தலுக்காக பாண்டியன் -இளவரசி காதல் ஜோடி காட்சிகள் படத்திற்கு உதவியிருக்கின்றன.
சிறை யில் பாகீரதி ..
என்றும் நம் மனச்சிறையில் வாழ்கிறாள் .

கலகலக்கும் ..பளபளக்கும் துபாய் தீபாவளீ.....ஈ..ஈ

துபாய் ல எப்படி தீபாவளி கொண்டாடுவாங்கன்னு எழுத சொல்லிருந்தார் ஒருவர் !
சும்மா வே....சலங்கை வேறயா ந்னு உங்க மை.வாய்ஸ் நா கேட்ச் பண்றேன் ! smile emoticon
UAE population ல 30 % போல நம் இந்திய மக்கள் தான்
அதாவது 2.6 மில்லியன் மக்கள் இருக்க , இதில் பல சிந்தி , குஜராத்தி மக்கள் சில தலைமுறைகளாக வந்து குடியேறி , இங்கேயே திருமணம் , இறுதிக்காரியம் செய்யுமளவிற்கு ஒன்றி விட்டனர்.
சரி தீபாவளி க்கு வருவோம் ! தீபாவளி பல வட இந்திய குடும்பங்கள் வாழ்வதால் ஒரு வாரம் முன்பே களைக் கட்ட ஆரம்பிக்கும் !
மராட்டியர் , குஜராத்தியர் , என பலரும் 5 நாட்கள் தீபாவளியாகக் கொண்டாடி இன்று இறுதி நாளாக லஷ்மி பூஜையுடன் முடிப்பார்கள்! இன்று நாங்கள் அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வதும்..வாடிக்கை.
முதலில் ஆரம்பமே , வீடுகளில் போடப்படும் கலர் கலரான சீரியல் லைட்ஸ் தான் .
வருடாவருடம் புதுப் புது டிசைன்களில் அலங்கரிப்பர் ! இந்த வருடம் இன்னும் ஜொலிக்கிறது இரவில் !
அடுத்தது..இந்தியக் கடைகளில்..கூட்டம் அலைமோத அதிகம் கடைவிரிக்கப்பட்டு நம் கண்களை விரியச்செய்வது அலங்கரிக்கப்பட்ட , பெயிண்ட் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ! ரங்கோலி கோல டிசைன்கள் , அதற்கான பவுடர்கள்!
இந்த நான்கு நாட்களில் செம ஆஃபர்கள் பறக்கும் , ரெண்டு எண்ணெய் பாட்டில்கள் , கடலை மாவு பாக்கெட்டுகள் , ஜாமூன் பாக்கெட்டுகள் ( நா அப்படித்தான் வாங்கி வந்தேன்! எழுத்திலும் நேர்மையானவள் :P) , மைதா மாவு இப்படி அனியாயத்திற்கு உசுப்பேற்றிவிடுவர் .
செஞ்சே ஆகணும் ந்ஞ் நினைக்காமல் பெண்மணிகள் வெளில வரவே முடியாது ! சில ஆண் moneyகளும் !
ஆங்காங்கே பாகிஸ்தானி , ஆஃப்கானி டைலர்கள் கடையுடன் காத்திருப்பர் , வாங்கிய துணியை தைக்க வருவரே ! பிகுவும் நடக்கும்..! எங்களால் முடியாது சுரிதார்..சூட் தைக்க என்று !!
அப்ப அங்க , சல்வார் மெட்டீரியல் , சாரி ல்லாம் கிடைக்குமா என்றால் , பூனே , சூரத் , லருந்து டைரக்டா வந்து இறக்கி கூசாமல் இந்தோனேசியாவிலிருந்து வந்தது என்று சொல்லி விற்பர் !
லேட்டஸ்ட் மும்பை டிசைகள் வந்திறங்கி இருக்க , இவிட வரு , அந்தர் ஆயியே ! என பல மொழிகளிலும் புரோக்கர்கள் அவர்கள் சரக்கை நம் தலையில் கட்ட முனைய ,
பெரிய இந்தியர்களால் நிர்வகிக்கும் ஷாப்பிங் மால்கள் Half price offer , 1+1 free , 75% sale இப்படியெல்லாம் போட்டு உள்ளிழுத்து , நம் பர்ஸை காலியாக்குவார்கள் !
அடேங்கப்பா..நம்மூர் காசுக்கு இவ்வளவா என கன்வர்ட் செய்துப்பார்க்கும் கணவான்கள் ரெங்கநாதன் கடைவீதி , பனகல் பார்க் ஆடம்பரங்களில் சிலதை வாங்கி வந்து இங்குள்ள ட்ரெஸ் ஆஃபர்களை, நோட்டம் விட்டும் பெருமூச்சு விட்டே ஏஸியை சூடாக்கிவிடுவர் !
நகைக் கடைகள் புது மணப் பெண் போலவும் , மக்கள் மொய்த்திட , திருமண ..அடச்சே !! திருவிழாக்கோலம் காணும்.
பெண்கள், குழந்தைகள் பண்டிகை உற்சாக பீறிட .. இன்று மாலை வீட்டு வாசலை விதவிதமான tea lights சின்ன சின்ன மெழுகு விளக்குகள் வைத்து அழகு பார்க்க ,
ரங்கோலிப் போடத் தெரியாதவர்களும் , ஸ்டென்ஸில் வைத்து , டிசைன் வரைந்து ஒப்பேற்றுவர்.smile emoticon tongue emoticon
வாசலை , வீட்டினை அலங்கரித்து இரவு ஒரு சேர்ந்த கும்மி சாப்பாடு (அதாங்க get together party) ஏற்பாடு செய்து பல வீட்டு பட்சணங்கள் , கூச்சமே இல்லாமல் செம , சூப்பர் டேஸ்ட் என்று சொல்லியே பரிமாறப்படும் ! 😆😊
டிவியை, நாங்கள் , காலை இங்க போடும்போதே,( இங்கே 4.30 அங்கு 6 am) மங்கள இசைவாசிச்சுட்டு நாதஸ்வர வித்வான்கள் ரிலாக்ஸ் மோட் க்கு போயிருக்க , வீட்டின் முன்னேற்றத்தில் முன் நின்று உதவுவது ஆண்களா பெண்களா என ஐயா என்ன சொல்றீங்க இப்ப என பட்டி மன்ற நடுவர் பேச , விழுந்து , விழுந்து சிரிக்கும் முதல் வரிசை , மாமா , மாமி முதல் நமட்டு சிரிப்புடன் அடக்கி வாசிக்கும் அக்காக்கள் வரை எடுத்தக் கை தட்டல் க்ளிப்பிங்க்ஸ் ஏ மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில்!
இல்லன்னா , புதிதாக பெயர் சூட்டப்பட்ட கதா நாயகி சிரித்துப்பேச , அவரை மிக பவ்யமாகப் பார்த்தப்படி புதுமுக இயக்குனர் ஆங்கர்களின் சிரிப்புக்கேள்விகளுக்கு சீரியஸ் பதில்ளித்தப்படி இருப்பர் !.
வார நாட்களில் தீபாவளி வரும் பட்சத்தில், தீபாவளி பார்ட்டி செபிலிரேட் செய்யவே, " என்ன , உங்கப்பா வீட்டு ஆபீஸ் ந்னு நினச்சியா!! " என அலம்பல் செய்துஆபீஸில் தீபாவளி லஞ்சுடன் (டீம். மெம்பர்ஸ் உடன்
லேட்டஸ்ட் செஃபீ Fb யில் அப்டேட் ஆகிருக்கும்) லீவு எடுக்காத கண்ணிய கணவர்களால் காலையிலே மனைவியிடம் சீன் போடப்படும் !
" இட்லி , வடை எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா , அவர் கிளம்பறதுக்குள்ள செஞ்சேன்! " என தலைகள் மறைந்ததும் (ஸ்கூலும் இருக்குமே) இல்லத்தரசிகள் சோபாவில் தஞ்சம் புகுந்து ,டிவி ரிமோட்டுக்கு உயிர் தந்திடுவர்! .பார்க்காம விட்ட பாடாவதிப் படங்களை ப் பார்த்து ஜென்ம சாபல்யம் அடைவர் !
ஆபீஸ் போற லேடீஸ் .. அங்கே traditional outfit ல். .அட நம்மூர் புடவை தாங்க .. அந்தப் பார்ட்டி ஜோதியில் ஐக்கியமாயிடுவர்.
இங்கே , பெரிய மசூதிக்கு அருகில் , பெரிய மனதுடன் ஒதுக்கப்பட்ட மாடிக் கோவிலில் முதல் நாளில் இருந்தே , ஒரு பாதாம் போட்டால் பாதாம் எடுக்க முடியாத அளவு கூட்டம் நெருக்கித்தள்ளும் ..ஆனாலும் அங்கு சென்றே பக்தியை பறைசாற்றுவோம்!
அப்படின்னா வெடி வெடிப்பதில்லை யா இதானே கேட்கறீங்க ? உஷ் .. பேசவேக்கூடாது !! ஆனால் வெளியில் வெடிச்சத்தம் கேட்கும்.
ரங்கோலி , சீரியல் லைட்ஸ், வரிசைக்கட்டி ஊருக்குப் பேசும் போன் கால் , விடாமல் நாட்டு நினைவையும் பண்டிகையின் மணத்தையும் அள்ளித் தரும் நம் டிவி சேனல்கள் , நம் நட்புக்கள் இவைகளே தீபாவளியை சிறப்பிக்கும் காரணிகள் துபாயில் ...


Sunday 3 April 2016

ஜீரோ .. பல்பு

ஜீரோ...

பூஜ்ஜியத்தில் தொடங்குவதாக சொல்ல ஆரம்பித்து..இது சூப்பர் நேச்சுரல் படமென்றதும்..எதுவும் ஆரம்பிக்கலையே என நினைக்கும் போது ஆரம்பமாகிறது .

அட்வகேட் ரவிராகவேந்திராவின் ஒரே மகன் அஸ்வின்.. அப்பாவிற்கு விருப்பமில்லாமல் ஷிவ்தாவை திருமணம் செய்துக்கொள்கிறார்.

பல படங்களில் பார்த்த அதே புதுமண தம்பதிகள் காட்சிகள்.. திடீரென்று ஆழ் நிலை தூக்கத்தில்.. ஹீரோயின் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்
.கதையும் நகர ஆர்ம்பிக்கிறது. அன்றுதான் பக்கத்துவீட்டு பெண்மணி துளஸியிடம் தன் வாழ்க்கைப்பற்றிக்கூற..அதன் பாதிப்பாக நாம் உணர.. அட என்னமாதிரியான படம் ப்பா இது என ரைக்டர் நம் பொறுமையை சோதிக்க..

ஷிவ்தாவின் பிங்க் கலர் ஆசைகள் அதிகமாக அவர் அம்மாவின் கைப்பிடித்தலுடன் அடிக்கடி வேற உலகிற்கு செல்ல..நாமும் சலிப்பின் உச்சத்திற்கு ..

ஆவிகளை உணரும்..பேசும் விஷேஷ சக்தியுடையவராக (JD)சக்ரவர்த்தி (அப்பப்ப தமிழிலும் தலைகாட்டுகிறார்) மனைவியுடன் பேசுவதாக அவரும் தன் பங்குக்கு சோதிக்கிறார் .

டாக்டராக ஷர்மிளா .. வேற என்னவோ ..இது..உன் வொஃபை அழைச்சிட்டுப்போ எனும்போது மனைவியை உணர்கிறார் ஆக்ஸிடெண்ட் மூலம் ஹீரோ.
.
மனைவிக்குள் உள்ள பேயா இல்ல எதாவது சூப்பர் நேச்சுரல் பவரா என்பதைக் காட்டி எப்படி மீட்கிறார் என்பதே புதுமுக இயக்குனர் ஷிவ் மோஹா வின் இயக்கத்தில் ஜீரோ !

அஷ்வின் வளர்ந்து வரும் கதாநாயகன் , கொடுத்த வேலையை சிரி(ற)ப்பாக..செய்ய..தாடியைமட்டும் கொஞ்சமும் சிரமப்படாமல் ஒட்டிக்கொண்டு பாதிப்படம் வருகிறார்.(ஏன் சார்..அவங்கங்க
.உடம்பை ஏத்தி இறக்கி என்ன்னென்ன்வோ மெனக்கெட..நீங்க இதுக்கூட செய்யாமல்..!! )

மனைவியாக ஷிவ்தா முதலில் அழகாக பின் அழுது.. கத்தி, முறைத்து, உருண்டு புரண்டு இயக்குனர் தந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

அவரது தாய் வரும் காட்சிகள்..முதலில் மன பிறழ்வு சைக்காலஜிக்கல் கதைப்போல நகர்ந்துப்பின் அமானுஷ்யத்தைப்புகுத்தி..கடைசியில்..தொட்டதும் பறக்கும் விதமாய்...அப்பப்பா ஏகப்பட்ட குழப்பங்கள்..! மைனஸ்கள்..! படம் ஆரம்பித்து 20 நிமிடங்களுக்குள் கதையை உணரவைக்க இயக்குனர் தவறிப்போகிறார்.

லிலித் எனும் ஆதாம் ஏவாள் கதைதானா  கிடைத்தது ஷிவ்மோஹ் !!

இதில் ..பல வித உணர்வுகளையும் பிரதிபலிக்கும் நிவாஸ் கே ப்ரசன்னாவின் பின்னணி இசை..எடிட்டிங் சுதர்ஸன் பாராட்டப்பட வேண்டியவர்கள். இயக்குனர் சொன்னதை உணர்ந்து தம் வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள் !

கௌதம் வாசுதேவ மேனனின் குரலில் ஆரம்பித்து..முடித்து புது முயற்சியாக வந்திருக்கும் சூப்பர் நேச்சுரல் படம் இந்த ஜீரோ..

அருகில்..1 ஐ இணைக்காமல்.. வெறும் பூஜ்ஜியமாக மட்டுமே திரைப்படம்.

#சுமி_சினிமாஸ