Thursday 21 January 2016

திருமால் பெருமை - திருவரங்கம் அருமை !!

திருமாலைக் காண்போமா .

தமிழ் பக்தி இலக்கியங்களில் வைணவ இலக்கியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இப்பாசுரங்களை எழுதியவர்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டனர். பன்னிருவரில்.. சோழ நாட்டில் பிறந்தவர் ,  அரங்கனை தவிர பிற தெய்வத்தை பாட மாட்டேன் என்று பக்தி பயிர் செய்த தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதியது திருமாலை - திருப்பள்ளியெழுச்சி.

திருமாலை அறியாதார் "திருமாலை" யையே அறியாதார் என்ற வாக்கிற்கு இணங்க..அந்த திருமாலை அறிய முற்படும் முயற்சியில்..

இதோ அடுத்தப்பாசுரம்.

பாசுரம் - 14.

வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதனவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திருவரங்கமென்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றைவிலக்கி
நாய்க்கிடுமினீரே...

வண்டினம் முரலும் சோலை - வண்டுகள் ரீங்காரமிடும் சோலை

மயிலினம் ஆலும் சோலை - மயில் இனங்கள் ஆடிடும் சோலை

கொண்டல் மீதனவும் சோலை - மேகங்கள் கவிழ்ந்து  நிற்கும் சோலை

குயிலினம் கூவும் சோலை - குயில்கள் கூவிடும் சோலை

அண்டர்கோன் அமரும் சோலை - அண்டங்களுக்கும் , வைகுண்டம் வாழ் நித்திய சூரிகளுக்கும் தலைவன் அமர்ந்திடும் சோலை

அணி திருவரங்கமென்னா - ஆபரணமாக விளங்கிடும் திருவரங்கம் என்னும் பெயரை

மிண்டர் - அறிவிலிகள் / செய் நன்றி கொன்றார்கள்

பாய்ந்து உண்ணும் - பாய்ந்து , விரும்பி உண்ணும்

சோற்றை விலக்கி - சோறும் உண்பதும் மட்டுமே வாழ்க்கையென்று உண்பவர்கள் சோற்றை தவிர்த்து

நாய்க்கிடுமினீரே - நீங்கள் நாய்க்கு போடுங்கள்.

இனி பாசுர விளக்கம் :

வண்டினங்கள் ஏகப்பட்ட தேனை உண்ட மயக்கத்தால் ரீங்காரமிட்டும் , மயில்கள் நர்த்தனமாடியபடியும் , மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கவிழ்ந்தும்  நின்றிட , குயிலினங்கள் கூவியப்படி உள்ளதுமான சோலை , பல அண்டங்களுக்கும் (உலகங்களுக்கும்) வைகுண்ட வாசம் புரிபவர்களுக்கும் அரசனான திருமால் விரும்பி அமர்ந்திட்ட சோலை , ஆபரணமாக விளங்கும் திருவரங்கம் என்று  சொல்லாத அறிவிலிகள்(நன்றி மறந்தவர்கள்) , பாய்ந்து   சோற்றை மட்டும் உண்பவர்களை தவிர்த்து , நீங்கள் நாய்க்கு சோற்றை இடுங்கள் .

--------**---------

முந்தைய பாசுரங்களில் , மஹாவிஷ்ணுவின் பெயர்களை சொல்வதன் பலன்கள் , திருவரங்கத்தின் பெருமை , மகிமை , திருவரங்கம் என்று சொல்வதால் கிடைக்கும் நன்மை என மற்றவர்களுக்கு உபதேசமாக சொல்லி வந்த ஆழ்வார் , இந்தப்பாசுரத்துடன் அதனை முடித்துக்கொள்கிறார்.

நாவில் வறட்சி ஏற்படும் போது , பச்சை கற்பூரத்தை வாயிலிட்டு அதை சரி செய்துக் கொள்வது போல , பக்தி சிந்தனையற்றவர்களை அரங்கனின் பெருமையை சொல்லி , அவன் பால் அவரது சிந்தனைகளை திருப்பிட முயன்றவர் சற்றே தன்னை புதுப்பித்து க்கொள்ள திருவரங்கத்தில் உள்ள சோலைகளின் அழகை தெரிவிக்கிறார்.

ஸ்ரீரங்கம் சுற்றியுள்ள சோலைகளில் , மரங்கள் , பூக்களில் மிதமிந்திய மது-தேனை அருந்திய வண்டுகள் அதில் மதிமயங்கி எழுப்பும் ஒரு வித ரீங்காரம் (முரலும் என்கிறார்.) செய்தபடியே கூட்டமாக கிளம்ப , அதை கருமேகம் என எண்ணிய மயிலனங்கள் தோகை விரித்து ஆட ஆரம்பிக்க , மயிலின் அழகையும் , தான் வரும் முன் ஏன் ஆடுகிறது என தெரிந்துக்கொள்ளவும் மேகங்கள் வந்து தலை கவிழந்திட , குயிலினங்கள் தாங்கள் அமர்ந்த கதகதப்பான இடத்தில் இருந்தப்படியே இந்த அழகை ரசித்தப்படி கூவிட அழகான சோலை.

இந்த சோலையில் , வீபிடணுடன் இலங்கை செல்லாமல் , நம் பொருட்டு ராமரால் தரப்பட்ட தங்க விமானத்துடன் கூடிய பெரியபெருமாள் - அரங்கன் , பல அண்டங்களிலும் வசிக்கும் அனைவருக்கும் அரசன் (தலைவன்-திருமால்) நமக்காக திருவரங்கம் வந்து தங்கிட்ட சோலை . அப்படிப்பட்ட திருவரங்கம் , சம்சாரம் எனும் பிணி போக்கிடும் அணி , ஆபரணம் இந்த திருவரங்கம் (அரங்கன்)
என்ற எண்ணம் இல்லாமல் , நன்றி மறந்து , அரங்கனை நினைக்காமல் , சோறு மட்டுமே முக்கியம் என்றெண்ணி , வாழும் மனிதர்களுக்கு உணவிடுவதை விட ,

ஒரு வேளை உணவிட்டதற்காக வீட்டு வாசலில் பழியாகக் கிடக்கும் நாய்க்கு உணவிடுங்கள் என்கிறார் ஆழ்வார்.

இந்தப்பாசுரத்தில் ஆழ்வார் நம் பால் கொண்ட அன்பு , நம்மையும் அரங்கன் பால் பக்திக்கொள்ள செய்யும் பாங்கு , ஆதங்கம் , திருவரங்கம் பெருமை அழகை சிலாகித்தல் அனைத்தும் புலனாகிறது .

ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தடுத்த பாசுரங்களுக்கு நகர்வோம்.

No comments:

Post a Comment