Wednesday 25 November 2015

திரு நாமப்பெருமை சொல்லும் திருமாலை

திருமாலை அறிவோம் !

ஆழ்வார்களில் எட்டாவதாக உதித்தவரும் , சம்சாரத்தில் இருந்து வெளிப்பட்டு ஆழ்வாரானவரும் ஆன விப்ர நாராயணன் என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் , பொன்னி நதி சூழ் திருவரங்கம் வாழ் பெரியக்கோவிலையுடைய பெரிய பெருமாள் - அரங்கனைப்பாடியது திருமாலை , திருப்பள்ளியெழுச்சி .இவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

இறைவனின் திருப் பெயர்களை , திரு நாமங்களை சொல்வதன் பெருமையை 45 பாசுரங்களைக் கொண்ட திருமாலையில் சொல்கிறார் ஆழ்வார் .

இனி பாசுரம் காண்போம்.

திருமாலை_பாசுரம் - 13.

எறிய நீர்வெறி கொள்வேலை மாநிலத்துஉயிர்களுக்கெல்லாம்
வெறிகொள் பூந்துவளமாலை விண்ணவர்கோனையேத்த
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பாராகில்
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே ...
----**-----

எறிய நீர் - மீண்டும் மீண்டும் நீர் வந்து வந்து அடிக்கும்..அலைகளாக

கொள்வேலை  - எப்போதும் மீன் நாற்றத்துடன் இருக்கக்கூடிய  கடல் சூழ்

மா நிலத்து உயிர்களுக்கெல்லாம் - புவியில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
வெறிகொள் - நல்ல நறுமணம் வீசும்
பூந்துவள மாலை - துளசிமாலை

விண்ணவர்கோனையேத்த - வைகுண்டத்தில் இடம்பெற்றவர்கள் போற்றக்கூடிய

அறிவிலா மனிசரெல்லாம்-  பரந்தாமன் நம் பொருட்டு அர்ச்சாவதர மூர்த்தியாக திருவரங்கம் வாழ்பவன் என்ற அறிவு இல்லாமல் உணவு , தூக்கம் வாழ்வென இருப்பவர்கள்

அரங்கமென்றழைப்பாரகில் - அரங்கம் என்று மட்டுமே அழைப்பார் எனில்
பொறியில் வாழ் - பல இந்திரியங்களுக்குக்கட்டுப்பட்டு வாழும்

நரகமெல்லாம் - அனைத்துத் துன்பத்திற்கும் காரணமாகிடும் இந்த உலகமெல்லாம்

புல்லெழுந்தொழிமன்றே - புற்கள் மண்டி அழிந்து போய்விடும் அல்லவா !! நடக்குமா ?

பாசுர விளக்கம்.

தொண்டரடிபொடியாழ்வார் முந்தையப் பாசுரங்களில் ஸ்ரீமத் நாராயணனின் திருப்பெயர்களை சொல்வதன் பலனைக்கூறி வந்தவர் , மற்றவர்களுக்கு அறிவுரையாக இல்லாமல்..தமக்கு தாமே சொல்லிக்கொள்வதுப்போல் இங்கே பாசுரமாக சொல்கிறார்.

எப்போதும் அலையடித்தவாறு (சம்சாரத்தில் உழன்று..பிற்ந்து பிறந்து வாழ்வதை அலை என்கிறார்) மீன்களால் துர்நாற்றம் வீசக்கூடிய கடல் சூழ்ந்த பூவுலகில் உள்ள உயிர்களெல்லாம்..எல்லோரும் (இங்கு ஆத்மாக்களைக்குறிப்பிடுகிறார்)

வெளிவரும் போதே நறுமணத்தை அள்ளித்தரும் துளசி மாலையை அணிந்து , நித்தமும் வைகுண்டத்தில் வசித்தவாறே போற்றிடக்கூடிய ஸ்ரீமன் நாராயணனே திருவரங்கத்தில் நம் பொருட்டு கிடக்கிறான் அரங்கனாக என்ற அறிவிழுந்த (உணவு , தூக்கம் , சம்சாரம் மட்டுமே வாழ்வென்றும்..அரங்கனைப்பற்றிய ) அறிவில்லாதவர்கள்  அரங்கம் என்று மட்டுமே அழைப்பார்கள் எனில்.
நம் உடல் இந்திரியங்களுக்குக் கட்டுப்பட்டு (சிற்றின்பவாழ்வில் கட்டுண்டு) வாழும் (சம்சார வாழ்க்கையால் )இந்த பூவுலகமே (நரகமே) புற்கள் மண்டிப்போய் விடும்
யாருமே ஊரில் இருக்க மாட்டார்கள்.

ஆகையால் அரங்கம் என்றாவது சொல்லுங்கள்..பரமபதம்சென்றடையுங்கள்.

ஆழ்வார் தாம் மட்டுமல்லாது அனைவருமே இன்புறு தனக்குத்தானே சொல்வதுப்போல நமக்கு சொல்கிறார்.

திருவரங்கத்தில் பெரிய பெருமாளாகக்கிடப்பவர் , அந்த வைகுண்டத்தில் உள்ளவர்கள் போற்றக்கூடியவர் , அவரை சரணடையப் பிறந்த மனிதர்கள் நாம் என்பதை மறந்து , ஆசைகளுக்கு ஆட்பட்டு மீண்டும் மீண்டும் சம்சாரத்தில் பிறந்து பிறந்து உழலும் நமக்கு இந்த பூமியே நரகம்..இந்த அறிவு இல்லாமல் வாழ்கிறோமே , நாம் அரங்கம் என்று மட்டுமே சொல்லி வந்தால் மீண்டும் பிறக்காமல் , வைகுண்டம் புகுந்தால் இந்த பூமியே மனிதர்கள் இல்லாமல் புற்கள் மண்டிப்போய் அழிந்துப்போய் விடுமே ! அரங்கம் என்றாவது சொல்வோமே ! என்கிறார்.

அரங்கம் என்ற சொல்லே , பிறவா வரம் தருமா ?

அரங்கம் என்று தொடர்ந்து சொல்லிட அரங்கனை தரிசிக்கும் ஆவல் எழும். தரிசித்து வர அவனது திருவுருவம் மனதில் பக்தியை தோற்றுவிக்கும்.

அந்த பக்தி இடைவிடாது அதிகமாகி அவனையே சரணடையச்செய்யும்.
அந்த சரணடைதலே வைகுண்டப் பதவியைப் பெற்றுத்தரும்.

இங்கு உயிர்களெல்லாம் என ஆழ்வார் குறிப்பிடுவது பிரம்மா , இந்திரன் , வருணந் , தேவர்கள் உட்பட்ட ஈரேழு உலகைச்சேர்ந்த ஆத்மாக்களைக் குறிப்பிடுகிறார்.

நம் பொருட்டு ஆழ்வார் இறங்கி பாடியுள்ளதைக் காண்கிறோம்.

அடுத்தப்பாசுரத்தைக் காண்போம் ஆழ்வார் அடிப் பணிந்து..
#திருமாலை

No comments:

Post a Comment