Thursday 8 October 2015

கடிக்காமல் கவர்ந்திடும் குற்றம் கடிதல்

குற்றம் கடிதல் , 

பெயரிலேயே ஆர்வத்தைத்தூண்டி புதுமுகங்கள் உள்ள ப்படம்  எப்படி இருக்குமோ  என்ற ஆவலையும் சேர்த்து எழுப்பி..எதிர்ப்பார்ப்புடன் பார்க்க  வைக்கப்படுகிறது.

ஆரம்பத்திலேயே புதுமணக் காதல் தம்பதிகள் அவர்கள் அன்னியோன்யம் , காலை அவசர சென்னை , என்னப்புதுசா இருந்திடப்போகுது  என்று யோசிக்கும்போதே...கேரக்டர்கள் அறிமுகம் அவர்தம் குணங்களுடன்..ஆர்வத்தைக்கட்டி நம்மை திரைக்கதை யுடன் ஒன்றி , அட! என்று கவனிக்க வைக்கின்றனர். 

மெர்லின் கணித ஆசிரியை, மணிகண்டன் என்ற கலப்புத்திருமண தம்பதிகளுடன் செழியன் , ஆட்டோ ஓட்டும் விதவைத்தாய் , ஆதரிக்கும் போராளிக்குணமுடைய மாமா என்ற கோணத்துடன் , பள்ளி சூழலில் நம்மையும் சேர்த்து..
என்னது , நாம பள்ளியிலேயே இருக்கோமே..!! ??

இயக்குனர் என்னதான் சொல்லவருகிறார் என்றெண்ணும் போதே..
கதைக்கானக் காரணம் ..குபீர் என்று வெடிப்பது சபாஷ் டைரக்டரே எனச்சொல்ல வைக்கிறது.

செய்திகளில் யாருக்கோ என்று பார்க்கும் நிகழ்வை நம்மை அதனுள் புகுத்தி உணர வைத்துப் பார்க்க,  இல்லை..  அலச வைக்கும் யுக்தி தமிழ் சினிமாவிற்கு புதிது. 

மெர்லினாக ராதிகா ப்ரசீதா டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் , மெல்லிய தேகம்..புதுத்தாலிக்கயிறுடன் , குங்குமம் வைப்பதும்..பின் அதுவே துன்பத்திற்கு காரணமோ என்றெண்ணி அழிப்பதும் , அலறுவதும்...என பல இடங்களில் நம் கவனத்தை ஈர்த்து... கண்கலங்கவும் வைக்கிறார்.

மணிகண்டனாக சாய் ராஜ்குமார்..விட்டுத்தராத காதல் கணவராக கடைசிவரை , கண்களை நிறைக்கிறார்.

பிரின்ஸிபல் , அவர் மனைவி..மெர்லினைக்காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் திரைக்கதை யை இழுக்க முயற்சித்தாலும் , அதை உணர விடாமல்..அச்சோ என்ன விபரீதம் இவர்களுக்குக்காத்திருக்கோ என்று எண்ண வைப்பது..கதையின் ப்ளஸ் . 

குறும்புக்காரனாக அறிமுகம் ஆகும் செழியன்(மாஸ்டர் அஜய் - தியேட்டர்லயும் சக்கைப்போடு போடும் நடிகராம் )  , கொட்டும் சாப்பாடு , அதனை கவனிக்கும் சின்னப்பெண் ஒரு சஸ்பென்ஸுக்காக வைத்து , இறுதியில் வேறுக்காரணத்துடன்  முடிச்சை அவிழ்த்த விதம் அருமை.

தியேட்டர் ஆர்டிஸ்டிஸ் , புதுமுகங்கள் என்றிருப்பதாலோ என்னவோ..ரியாலிட்டிக்கொண்ட கதையில் பாத்திரங்கள் சற்றே டிரமாடிக் ஆக பேசுவது,  குறும்பட எபெக்ட் தருகிறது.

மதுபாலகிருஷ்ணனின் குரலில் முதல் பாடல் , சின்னசிறுஞ்சிறுக்கிளியே பாரதியார் பாடல் .. பின்னணியில் ஓலக்குரலில் உயிர்க்குலைக்கும் பாடல், அளவான பிஜெம் என தேவையான இசையைத்தந்து என்று  இணைக்கிறார் நம் மனதை படத்துடன் இசையமைப்பாளர் சங்கர் ரெங்கராஜன் .

மணிகண்டனது கேமரா..பஸ்ஸிலும்..ஆட்டோவிலும் , இருட்டிலும் , பள்ளி டெஸ்க்லும், (சமயத்தில் ஹீரோயினுக்கு பல்வேறு ஆங்கிளில்  க்ளோஸப் !! ?? அதைக் குறைத்திருக்கலாமோ .. ) என  வெகு சாதாரணமாக பயணிப்பது படத்தின் ப்ளஸ்..யதார்த்தத்தின் மாஸ் !

வசனங்கள் , நிறைவான கதையமைப்பு..காட்சிகளை விவரித்து, முடிக்கும் பாங்கு என பிரேமிற்கு பிரேம் அசத்துகிறார் அறிமுக இயக்குனர் பிரம்மா.
செக்ஸ் எஜூகேஷனா , மீடியாக்களின் அவசர அராஜகக்கோலமா ,பள்ளிகளின் டிசிப்ளின் என்ற முறையில் அரங்கேறும் அத்துமீறல்களா என பலக்கோணங்களிலும் சுழலும் கதை சற்றே பலவீனத்தைத்தந்தாலும் , இயல்பாக செல்வதால் வெல்கிறது நம் மனதையும்.

திருவள்ளுவரின் அதிகாரமாகிய குற்றம் கடிதலை..(குற்றமே பகையாகலாம் ! ) கதைக்கருவாகக்கொண்டு , எல்லாம் சரியாகும் என்ற பாஸிட்டிவான வசனத்தையே படம் முழுதும் கொண்டு , இயல்பான நடையில் யதார்த்தைச்சொல்லி ,
நடிப்பிற்கோ கதைக்கோ..அழகான , சதையான
ஹீரோ யின், சிக்ஸ்பேக், வழுவழு ஹேண்ட்சம் ஹீரோவும் தேவையில்லை என மரபுகளை உடைத்து..பார்க்கவைக்கும் திரைப்படம் தமிழ்சினிமாவின் ஆரோக்கிய ஓட்டம் இந்த குற்றம் கடிதல்..

தேசிய விருதுடன் நம் வாழ்த்துகளும் குழுவினருக்கு.. !!

சுமி_சினிமாஸ்..

No comments:

Post a Comment