Thursday 24 September 2015

திருமாலை காண்போமா

திருமாலை  பாசுரம் - 12.

வைணவ சம்பிரதாயங்களையும் , திருமால் பக்தியையும் பரப்ப வந்தவர்கள் ஆழ்வார்கள் . இவர்கள் பல்வேறு திருக்கோவில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருமாலை ,  ஸ்ரீ மஹா விஷ்ணு வைப் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப்படுகிறது.

தாயும் தந்தையுமாக மற்றவர்களுக்காக கவலைப்பட்டு இவர்கள் பாடிய பக்தி இலக்கியத்தில் , திருமாலை.. ( 45 பாசுரங்களும் )தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றியதும் ஒன்று.

இதற்கு முன்பு நாம் கண்ட பாசுரங்களில் இறைவனின் திரு நாமங்களை சொல்வதன் மகிமையை , அதனால் உண்டாகும் பலன்களை , சொல்லாமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் என தெளிவாகக்கூறி வந்த ஆழ்வார் , இதிலும் , திருப்பெயர்களை சொல்வதால் ஏற்படும் நல்லதையும் , நமக்காக இறங்கியும் பாடியுள்ளார்..இனி பாசுரம் காண்போமா !!

திருமாலை - 12 .

பாசுரம் :

நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர்
கவலையுட்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே

நமனும் முற்கலனும் - எமனும், முத்கலன் என்பவனும்
பேச - க்ருஷ்ணாய என்ற திரு நாமத்தை முத்கலன் கூறியப்பற்றி பேச, பேசியப்படி இருக்க
நரகில் நின்றார்கள் கேட்க - நரகத்தில் , எம பட்டணத்தில் நின்றப்படி தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தவர்கள் கேட்க
நரகமேசுவர்க்கமாகும் - அந்த நரகமே சொர்க்கமானது
நாமங்களுடைய நம்பி - நரகத்தையே சுவர்க்கமாக்கக்கூடிய நாமங்களை , பெயர்களை க்கொண்ட நம்பி - பெருமாள்
அவனதூரரங்கமென்னாது - அவனது ஊர் , உள்ள இடமே அரங்கம் என்று எண்ணாமல் (சிந்தனையில் கொள்ளாமல்)
அயர்த்து - மறந்துப்போய் (அயர்ந்துப்போய்)
வீழ்ந்தருளியமாந்தர் - சம்சாரம் எனும் மாயையில் வீழ்ந்து , வாழ்ந்து வரும் மனிதர்கள்
கவலையுட்படுகின்றாரென்று - சம்சார வாழ்க்கைப்பற்றிய கவலையிலேயே மூழ்கிக்கிடக்கின்றாரே என்று
அதனுக்கேகவல்கின்றேனே - அதற்காகவே , அவர்களுக்காகவே கவலைப்படுகின்றேன் .

பாசுர விளக்கம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்ற புராணத்தில் தொண்ணூற்று ஆறாவது பகுதியில்    முத்கலோபாக்யானத்தில் முத்கலன் என்பவன் ,
தான் பெரும்பாவங்கள் செய்ததற்கு பரிகாரமாக , எள்ளினால் செய்த பசுவை ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்றுக்கூறி , தானமாக வழங்கிட , அவன் இறந்தப்போது , யம தூதர்களால் பிடிக்கப்பட்டு யம லோக வாயிலில் நிறுத்தப்படுகிறான் .

யமனிடம் இந்த கிருஷ்ணாய என்ற திரு நாமத்தை அவன்  கூறியதைக்கேட்டு  மற்ற தண்டனை ப்பெற்றுக்கொண்டிருந்த நரக வாசிகளின் தண்டனை மறைந்து , அந்த நரகமே ஸ்வர்க்கமாக மாறியதாக வருகிறது .

அதை இங்கு தொண்டரடிப்பொடியாழ்வார் குறிப்பிட்டு அத்தகைய சிறப்பான பல நாமங்களுடைய திருமால் , இருக்கும் ஊர் , திருவரங்கம் என்று எண்ணாமல் ,
( இறைவனின் திருப்பெயர்களை சொல்ல முடியா விட்டாலும் , கேட்கலாம் அதுவும் இல்லாமல் ) , சம்சாரம் எனும் மாயையில் வீழ்ந்து , அதனால் வரும் துன்பங்களுக்காக வருந்தி கவலையுற்று ,

இறை சிந்தனை இல்லாமல் வாழ்ந்து மடிகின்ற மனிதர்களை நினைத்து , நான் அவர்களுக்காகவே கவலைப்படுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.
தாயாக பரிவுக்கொண்டு , நம் பாபங்கள் தீர , கவலைக்கொண்டு சோழ நாட்டில் திரு மண்டகக்குடியில் அவதரித்த , தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாசுரம் இது.

ஆழ்வார்களின் பாதம் பணிந்து அடுத்தடுத்தப்பாசுரங்கள் காண்போம் !
இன்று மஹா ஸ்ரவணமும் , ஏகாதசியும் சேர்ந்த நாளில் திருமாலை நினைவிற் கொள்வோம் .


No comments:

Post a Comment