Wednesday 26 August 2015

வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள்

Mrs. Thennamai Lakshmanan , வலைப்பதிவர் , கவிஞர் , எழுத்தாளர் ,
இவர் பெயரில் கட்டுரைகள் வர இன்னும் புதிதாக பத்திரிக்கைகள் ஆரம்பிக்க வேண்டும். மற்ற அத்தனையிலும் வந்தாயிற்று ! புத்தகங்கள் வெளியிட்டு அமைதியாக வெளிப்படும் பிரபலம் இவர்.
முதலில் எதேச்சையாக தேனம்மையின் கவிதைகள் என்ற பெயரில் ஒரு பேஸ்புக் ஐடி பார்த்தேன் ! யாரிவர் என அறியத்துவங்கும் ஆவலை அறிந்து நாமெல்லாம் இவர் எழுத்துக்களை படிக்க முடியுமா என்றெண்ணி மலைத்திருந்தேன் .

http://www.honeylaksh.blogspot.ae/ - சும்மா ந்னு ஒரு blog ,எம்மா ந்னு சொல்ல வைக்கும் ! அது இவர் ப்ளாக்.
கோலமா , சமையலா ஜஸ்ட் லைக் தட் .. அள்ளிப்போடறாங்க நம் மனசையும் அவங்க வலைப்பதிவுகளில் .
நான் ப்ரொகிராமிங் மேனேஜராக இருந்த தமிழ்குஷி FM இணைய வானொலி யில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி இன்னொரு ஆர் ஜே நண்பர் செய்ய , தேனம்மை அவர்களது பேச்சும் கேட்டேன் ..குரலையும் கேட்டால் சும்மா இருப்போமா ? அனுப்பினேன் அழைப்பே..ஏற்றார் எளிமையுடன் .
இத்தனை எளிமையா என்று வியக்க வைக்கும் இவர் கமெண்ட்ஸ் பார்த்திருக்கிறேன் . அசால்ட்டாக அள்ளி முடியும் கவிதைகள் படித்திருக்கிறேன்.
அதே  போல் , ஒரு நாள் ...
சுமி , சாட்டர் டே போஸ்ட் ல எனக்கு பெருமாள் ரொம்பப்பிடிக்கும் அவரைப்பற்றி எழுதி தர்றீங்களா ?!  என்ற இன்பாக்ஸ் மெசேஜ் பார்த்தேன் !
கரும்புத்தின்னக்கூலியா ?!  , கண்களைப்படைத்து , தன்னைப்பற்றி தொழ கைகளை தந்து , பாட வாயினைத்தந்து , நல்ல சிந்தனையை தந்த இறைவனைப்பற்றி எழுத கசக்குமா என்ன !
ஆனால் முதல் அனுபவம் , வெளியில் எழுதித்தர அதுவும் பக்திக்கட்டுரை !
மிக பயமாக , தள்ளிப்போட்டே வந்தேன் மணித்துளிகளை !
அப்போது , குருவினைப்பற்றினால் பயம் விலகும் வழிகிடைக்கும் ..குருவாக ஆழ்வார்களை பற்றுவோமே என்றெண்ணி , வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள் என்ற தலைப்பில் எழுத சங்கல்பம் செய்துக்கொண்டேன் , அவரும் இசைந்திட சில பாசுரங்களுடன் சுருக்கமாக எழுதி தந்தேன் !
இதோ அவர் பதிவு .
அவர் முன்னுரையும் , டிஸ்கியும் எனக்கு  புன்னகையை அள்ளித்தந்தன.
அதையும் பகிருறேன் . தவறாமல் படித்து செ(சொ)ல்லுங்கள்
--------------------()--------------------
சாட்டர்டே போஸ்ட் :- ஆழ்வார்களும் அரங்கனும் சூடிய சுடர்க்கொடி சுமிதாவும்.
முகநூலில் என் அன்பிற்குரிய தங்கைகளுள் ஒருவர் சுமிதா ரமேஷ். அழகான கவிதைகளும் அதைவிட அழகான அரங்கன் பதிவுகளுமாக மனதைத் தொட்டவர். என்றும் புன்னகை, எளிமை, அசத்தலான பதிவுகள் எனக் கலக்கி வருபவர். முகநூலில் மட்டுமல்ல கூகுள் ப்ளஸ்ஸிலும் இவர் பதிவுகள் பார்த்து அசந்ததுண்டு. அரங்கன் மேல் எனக்கும் பித்தென்றாலும் இவர் வழி தனி வழி. தினமும் தவறாமல் ரசனையோடு அரங்கனைப் பாடிப் பரவிப் புகழும் இவரின் பதிவை என் வலைத்தளத்திலும் வெளியிட ஆவல் மிகுந்தது. 
/// அரங்கனைப் பற்றி நாலாயிர திவ்யப் ப்ரபந்தப் பாடல்களுடன் எனது தளத்துக்காக எழுதித்தரமுடியுமா சுமி. // 
 என முகநூல் உள் டப்பியில் தொடர்பு கொண்டபோது தினம் அரங்கனைப் பற்றி எழுதி வரும் அவர் ஆழ்வார்களைப் பற்றியும் எழுதித் தருவதாகச்சொன்னது களிகூரச் செய்தது. எம்பெருமான் சங்கல்பம். இதையே அவரும் சொன்னது பார்த்து இன்புற்றேன். :)
 வைணவத்தில்  திளைத்த  ஆழ்வார்கள்
 நம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை  நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.
அவற்றுள் , வைணவ இலக்கியங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் ,  ஆழ்வார்கள் எனப்போற்றப்பட்ட பன்னிருவரால் எழுதப்பட்டவை .
பாற்கடலில் துயிலும் பரந்தாமன்  – திருமால் , பூலோகத்தில்  அர்ச்சாவதாரத்தில் அருள்பாலிக்கிறார் பல திருத்தலங்களில் .
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
 வைணவ பக்தியில் திளைத்திருந்தவர்கள் பலரும்   பல திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகை , சிறப்பை ,இறை தியானத்தை பல வழிகளிலும் , பூவுலகத்தில் துயர் தீர்ந்து மக்கள் , பிறவா வரம் எனும் மோட்சப்பராப்தியடைய வழிகாட்டி சென்றுள்ளனர். 
இறைவனை அடைய   ஆண்களுக்கு பல வழிகளை உரைத்த  வேதம் ,
பெண்களுக்கு, மனதில் சிந்தித்து , வாயினால் பாடி , மாலவனை தூய மலர்கள் கொண்டு தூவித் தொழுதால் மட்டும் போதும் என்கிறது .
திருமால் , எம்பெருமான் , வராஹ அவதாரத்தின் போது , பூமிப்பிராட்டியாருக்கு கூறியதே,   பூதேவியே  பூவுலகில் கோதை –ஆண்டாளாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்
பிறந்து நமக்களித்த திருப்பாவை 
மார்கழி மாதம் மட்டுமின்றி , மற்ற நாட்களிலும் திருப்பாவை பாடி , தூய உள்ளத்துடன் ஸ்ரீமஹா விஷ்ணுவை தொழுதிட அவனருள் கிட்டிடுவதோடு , மீண்டும் பிறவா வரமும் அளிக்கிறான் மாதவன் என்பது ஆன்றோர் வாக்கு. 
 *சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
     குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
     எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
     மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்
சிற்றஞ்சிறுகாலே - பொழுது விடிவதற்கு மிகவும் முன்னால்;
பொருள் - காரணம், பலன் என்னவென்றால்; பெற்றம் - பசுக்கள், கறவைகள்;
குற்றேவல் - உனக்கு பணிவிடை செய்ய, ஏவியதைச் செய்ய; இற்றை - இன்று;
பறை கொள்வான் அன்று - பறையைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல,  உன் சன்மானத்தை மட்டும் அடைந்து போய் விடுவதற்கு அல்ல;
எற்றைக்கும் - என்றும், காலமுள்ள அளவும்; உற்றோமே - உறவு உடையவர்களே;
ஆட்செய்வோம் - அடிமை வேலை செய்வோம்; காமங்கள் - ஆசைகள்;
முப்பது பாசுரங்களும் படிப்பது இயலாவிடினும் , சிற்றஞ்சிறுகாலை மட்டும் ஆவது சொல்வது  சாலச்சிறந்தது .
ஆண்டாளின் பாதம் தொழுது அவள் காட்டிய வழியில் திருமாலை வணங்கி மற்ற ஆழ்வார்களையும் , எப்படி அவர்கள் வைணவத்தில் திளைத்து , திருமாலை தொழுதனர் என்பதை சுருங்க க்  காணலாம் .
ஆழ்வார்கள் பன்னிருவர் .
முதலாம் ஆழ்வார்களில்  மூவர் பொய்கையாழ்வார் , பூத த் தாழ்வார் , பேயாழ்வார் ,பாடிய பாடல்கள் முதல் திருவந்தாதி , இரண்டாம் திருவந்தாதி , மூன்றாம் திருவந்தாதிஎன நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இடம்  பெற்றுள்ளது  . தலா 100 பாடல்கள் .
காஞ்சியில் பொய்கையில் அவதரித்த பொய்கையாழ்வாரும் ,  மறு தினம்  திருகடல் மல்லை எனும் மாமல்ல புரத்தில் அவதரித்த பூதத்தாழ்வாரும் , திருமயிலையில் அதற்கு மறு நாள் ஒரு கிணற்றில் அவதரித்த பேயாழ்வார்  ,
இவர்கள் மூவரும்
சிலை வடிவில் அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக ஆங்காங்கே கோயில்களில் வரும் பக்தர்களை தம் குழந்தையென எண்ணி அவர்தம் கஷ்டங்கள் நீக்கி , அவர்கள் விரும்பும் வரத்தை அருள வீற்றிருக்கும் திருமாலின் அழகு , அவர் தம் எளிமை யை , அவரின் அடியார்களாக , அவரின் புகழை தம் பாடல்களில் பாடியுள்ளனர்.
ஒரு சுவாரஸ்ய சம்பவமாக திருக்கோவிலூரில் மிருகண்டு முனிவரின் குடிலில் இடைக்கழியில் ஒர் மழைக்கால இரவில் மூவரும் சந்தித்த போது தோன்றிய பாசுரங்கள் , அடியவர்க்கு இரங்கும் ஆண்டவனின் பெருமையை நமக்குக்காட்டுகிறது .
முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -
       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 
  'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -
       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 
 'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -
       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று .
ஒருவர் மட்டுமே படுக்க முடியுமென்று முனிவரால் தரப்பட்ட இட த்தில் மூவர் மழைக்கு ஒதுங்கியப்படி இப்பாசுரங்களை பாடிட , முன்னும் பின்னும் பலர் நெருக்கிட சுகந்தமும் , துளசியின் மணமும் , பக்தர்களும் நெருக்குவதைப்போல் உணர்ந்தனர் .
ஆம் .
இவர்களது அன்பையே மனதில் விளக்காக எண்ணி அதில் திருமாலின் மேலுள்ள பக்தியையே எண்ணெய்யாக்கிட பக்தியில் திளைத்து அங்கு பரந்தாமன் காட்சி தந்திருக்கிறான் தன் பக்தர்களுடன்.
என்னே பக்தி , எளியவனுக்கும் இரங்குபவன் அல்லவா இறைவன் .
திருமழிசையாழ்வார் .. அற்புதமான சற்றே வீரமும் , சிறப்பும் அதிகரிக்க திருமாலைப்பாடியவர் . இவர் எழுதியது நான் முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம்.
நான்முகனை நாரணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான் - யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேனாழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து.
மொத்தம் 216 பாடல்கள் பாடியுள்ள திருமழிசையாழ்வார் , திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். சிவ பெருமான் மூன்றாவது கண்ணால் எரிப்பேன் என்றும் துச்சமாக எண்ணி திருமாலே ஆதியும் , அந்தமும் அற்ற பரம்பொருள் என்று முழங்கியவர் .
இவர்தம் பெருமை கூறும் பாசுரங்கள் பலப்பல. !
இறுதியாக கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலில் முக்திப்பெற்றார் என அறிகிறோம் .
1296 பாடல்களை இயற்றியவர் நம்மாழ்வார் , இவர் திருநெல்வேலி யை அடுத்த ஆழ்வார் திரு நகரில் பிறந்து , தவழும் குழந்தையாக உள்ளபோதே கோவிலின் அருகேயுள்ள பொந்தினுள் புகுந்தவர் , மதுரகவியாழ்வாரின் கேள்விக்குபதிலளிக்க தமது 16 வது வயதில் பேச ஆரம்பித்தார் 37 திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகையும் , அதில் தாம் லயித்ததையும் ,நாயிகா பாவத்தில் , தன்னையே பெண்ணாக உருவகப்படித்தி அதில் கண்ணனின் பேரழகை வர்ணித்து , உருகிப்பாடியுள்ளார்.
ரிக் , யஜூர் , சாம, அதர்வண வேதங்களின் சாரமாக திருவிருத்தம் , திருவாசிரியம் ,திருவாய்மொழி , பெரிய திருவந்தாதி நம்மாழ்வாரால் எழுதப்பெற்றவை.
நம் ஆழ்வார் என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி ,மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும் எழுதவாராம்.
என்னே ஆழ்வாரின் பக்தி !!
நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்வி குடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். !
மற்ற ஆழ்வார்கள் திருமாலை பணிந்து பாடல்கள் இயற்ற , இவர் தம் குரு ,நம்மாழ்வாரின் பாதம் பணிந்து , அடியார்க்கு அடியாராக "கண்ணி நுண் சிறுதாம்பு " என்று தம் குருவின் பெருமையை 11 பாடல்களில் வெளிப்படுத்தியவர் !
இறைவன் தம்மிடம் பக்திசெலுத்துபவர்களை விடவும் , தம் பக்தர்களின் பால் அன்பு கொண்டு , அவர்களுக்கு சேவை செய்து வரும் பக்தர்களின் பக்தர்களை மிகவும் நேசிக்கிறானாம்.
இதை, திருக்கச்சி நம்பிகள், தீயில் தோன்றிய தேவ நாத பெருமாளிடம்,ஆளவட்ட கைகர்யம் செய்து வரும் வேளையில்  , ”எப்போது எமக்கு வைகுண்டப்பிராப்தி கிட்டும்?” என்று  கச்சி நம்பிகளின் மூலமாக , இறைவனிடம் கேட்டு பதிலாக பெறுகிறார் வைணவம் தழைத்திட பின் வந்த இராமனுஜர்.
குலசேகர ஆழ்வார்
ராம பிரான் மீது அலாதி பக்திக்கொண்டவர் குலசேகர ஆழ்வார் இவர் சேர நாட்டின் மன்னனாக முடி சூடியிருந்த காலத்தில் தம் தேசத்தில் வரும் பாகவதர்களின் இராமாயண சொற்பொழிவில் மிகவும் ஆழ்ந்துப்போய் , சீதையை மீட்க தாமும் தம் சேனைகளுடன் போக விரும்புவதாக கூறி சேனைகளுடன் கடற்கரையில் காலம் கழித்தவர் . அத்தனை ராமபக்தி !
திருவரங்கம் செல்வது தம் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு தினமும்.. ஸ்ரீரங்கம் உள்ள திசை நோக்கி தொழும் பக்தி இந்த ஆழ்வாரின் பக்தி.
திருவேங்கடம் வாழ் ஸ்ரீனிவாசனும் , திருவரங்கம் வாழ் அரங்கனின் மேலும் அளவில்லா பக்தியில் திளைத்திருந்த குலசேகர ஆழ்வார்..
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
என்ற பாசுரத்தில் பக்தர்களின் பாதத்துளிகள் படும் படியாக நான் கிடந்து நின் பவள முகம் பார்த்தப்படி இருக்கும் பாக்கியம் வேண்டுமே என்கிறார்.
மெய்சிலர்க்கும் ஆழ்வாரின் பக்தியையறிலாம்.
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி தந்து , தொண்டர்களுக்கும் அடியவராக திருமால் பக்தியில் சிறந்திருந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் , இவரின் இயற்பெயர் விப்ர நாராயணன்.
தாசியின் காமச்சிறையில் விழுந்து அரங்கனின் மேல் இருந்த பக்தியை மறந்தவருக்கு பாடம் புகட்டினான் அரங்கன்.
அவனது லீலைகளால் , மனம் திருந்தி , வைகுண்டம் சென்று வாழும் அந்த உலகம் வேண்டாம் , உன்னுடைய அர்ச்சாவதார மூர்த்தியின் அழகை தரிசித்தப்படி இந்த திருவரங்கம் வாழும் வாழ்வே போதும் என்கிறார் இப்பாசுரத்தில்..
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே.
ஆயர்தம் கொழுந்தே என்னும்,
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.
பரம்பொருள் திருமால் ஒருவனே , அவனை சரணடைந்தால் மற்ற இப்பூவல துன்பங்கள் யாவும் அழிந்து , இன்ப வாழ்வு பெறலாம் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்களில் அறியலாம்.
பக்தியில் மயங்கி பக்தர்களின் அன்பில் கட்டுப்பட்டு தன்னையும் பாகவதனாக எண்ணுவதில் அரங்கன் செய்த லீலைகள் ஏராளம்.
திருப்பாணாழ்வார்.. இவருக்கு ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கனின் மேல் சிறந்தப் பக்திக்கொண்டவர் , நெற்கதிரில் உதித்த இவர் ,  பாணர்கள் குலத்தில் வளர்க்கப்பட்டார்.
பண்ணிசைத்து தென்காவிரிக்கரையில் நின்றப்படியே அரங்கனை நினைத்து தினமும் பாடுவது அவர் வழக்கம்.
அப்படி ஒரு முறை தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கையில் அரங்கனுக்கு பூசை செய்ய நீர் எடுக்க வந்த லோக சாரங்க முனிவர் , இடைஞ்சலாக நின்றுப்பாடிக்கொண்டிருக்கும் பாணர்  தான் ஒதுங்கச்சொல்வதை காதில் வாங்காமல் நிற்பதை பார்த்து அவர் மேல் கல்லெறிய அது நெற்றியில் பட்டு ரத்த ஆறாக ஆனது.
இப்போது அவரை ஆட்கொள்ள எண்ணிய அரங்கனின் நெற்றியிலும் அதே ரத்தம் வழிய, அரங்கன் அசரீரி யாக கூறி அவரை தம் தோளில் சுமந்து அழைத்து வருமாறு முனிவருக்கு ஆணையிட , முனிவர் தோளில் சுமந்து வர , பெரிய பெருமாளின் முன் இறக்கி விடப்பட்டவர் , திருமுடி முதல் திருப்பாதம் வரை சேவித்து அமலனாதிபிரான்எனும் பத்துப்பாடல்களை சமர்ப்பித்து பெரிய பெருமாளின் திருவடியில் நீர் போல மலர்ந்து மறைகிறார்.
எத்தனை எத்தனை பக்தி ! பண்ணால் இசைத்து , இணைந்த ஆழ்வார் திருப்பாணாழ்வார்.
பெரியாழ்வார்   மதுரை மா நகரில் ,விஷ்ணு சித்தர் என்ற இயர்பெயருடன்  ஸ்ரீவில்லிப்புத்தூரில் , வட பத்ர சாயி திருக்கோயிலில் எம்பெருமானுக்கு , பூ கட்டி திருத்தொண்டு புரிந்து வந்தவர் .
 வைணவமே சிறந்தது , திருமாலே பர தெய்வம் , பாண்டியனிடம் என்று நிலை நாட்டிட ,அதைக்கண்டு மகிழ்ந்த இறைவன் கருட வாகனத்தில் மேலே வானத்தில் விரைந்து வர அந்த அழகை குழுமியுள்ள மக்கள் கண்டு அதன் மூலம் இறைவனுக்கு கண் பட்டு விடுமோ என்ற தாயுள்ளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்தி பாடியுனார் .
திருமணமாகாத பெரியாழ்வார் , துளசி நந்தவனத்தில் ஒரு குழந்தையை பெயரிட்டு தம் மகளாக வளர்த்து , அவளுக்கு கோதை என்ற பெயர் சூட்டி கண்ணனின் கதைகளை மனதில் விதைக்கிறார்.
 வளர்ந்த கோதை நம் ஆண்டாள் , மானுடக்குலத்தில் பிறந்தவரை மணக்க மாட்டேன் என்று அறுதியிட்டுக்கூற , திருவரங்கம் வாழ் அரங்கனையே மணப்பேன் என்று சூளுரைத்து , வாரணம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்று ஆயிரம் யானைகளுடன் வந்து திருமால் என்னை மணந்துக்கொள்வான் எனக்கனவு கண்டேன் கூறுகிறார். இது நாச்சியார் திருமொழி மூலம் நாம் அறிகிறோம் . மற்ற ஆழ்வார்கள் பெண்ணாக தன்னை எண்ணி , இறைவனை உருகி பாடிட , பெண்ணாகவே பிறந்து பாடிய ஆண்டாள் சிறப்பான ஆழ்வார் தகுதியையும் பெறுகிறார்.
தகப்பனாக பெரியாழ்வாரும் , சோழ அரசனது ஆணையின் பேரில் ரெங்கனின் சார்பாக அனுப்பப்பட்ட பல்லக்கில் மகளை அனுப்பி.. ஆண்டாள் திருவரங்கத்தில் தங்கி , ஒரு நன்னாளில்.. பெரிய பெருமாளை தரிசித்து , அவரைத்தொட்டு வணங்கிட மறைகிறார்.
வணங்கிய திருமாலையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வர் நெகிழ்ந்து , எம் பெருமானின் ஆணைப்படி , ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பி தம் பணியை செவ்வனே செய்து ,வைகுண்டம் சேர்கிறார்.
இவரது பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி 473 பாடல்கள். தாயாக , தன் குழந்தையாக கண்ணனை பாவித்து உருகி பாடியிருக்கிறார் ஆழ்வார்.
இவரே பெரிய ஆழ்வார் என்று அரங்கனாலே அழைக்கப்பட்டவரும் ஆவார்.
எத்தனை சிறப்பான பக்தி !!
அடியார்களை ஆட்கொள்வதில் அரங்கனுக்கு நிகர் அரங்கனே !
திருமங்கை எனும் நாடு அப்போதையை சோழ தேசத்தில் சிற்றரசாக இருந்தது. அதை ஆண்ட மன்னன்  நீலன், இவர்  சேனைத்தலைவரின் மகனாக பிறந்து அரசரானவர் .
 குமுதவல்லி என்ற பெண்ணிற்காக , நாச்சியார்கோவில் பெருமாளிடம் திருசங்கின் இலச்சினைப்பெற்று , திருக்கண்ணபுரம் பெருமாளிடம் , திருமந்திர உபதேசமும் பெற்று, தினமும் 1008 வைணவர்களுக்கு உணவிட்டு , அவர்தம் பாதத்துளியான  நீரைப்பருகி,அவரை மணக்கிறார்.
பின்னர் மனைவியின் ஆசைப்படி வைணவத்தொண்டும் , திருவரங்கம் கோவிலின் மதிலை கட்டும் பணிக்காக பல திருட்டுகள் செய்கிறார்.
அதற்காக திவ்ய தம்பதியராக பெருமாளும் தாயாரும் வந்து நல்வழிக்காட்ட பல பாடல்கள் இயற்றி ஆழ்வாராகிரார் திருமங்கை மன்னன்.
இவர் தம் ஆடல் மா என்ற குதிரையுடன் பல திருக்கோயில்களுக்கும் இறைவனின் திருவுருவை கண்டு பாடியுள்ளார்.
அவை.. பெரியதிருமொழி , திருக்குறுந்தாண்டகம் , திரு நெடுந்தாண்டகம் ,திருவெழுக்கூற்றிக்கை , சிறிய திருமடல் , பெரிய திருமடல் என மொத்தம் 1253பாடல்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் அலங்கரிக்கின்றன.
எம்பெருமானின் புகழையும் , ஆழ்வார்களது சிறப்பையும் பின்னாளில் வந்த ஆச்சார்யர்கள் மக்களிடம் கொண்டு சேர்த் தனர் .
ஆச்சார்யர் , ஆழ்வார்  , திருமகளின் பாதம் பற்றி திருமாலை  சரணடைவோம் .
இதற்கு திருமதி. தேனம்மை அவர்கள் எழுதிய டிஸ்கி..
டிஸ்கி :-
நன்றி சுமி மிக விரிவாக ஆழ்வார்கள் பற்றிப் பகர்ந்தமைக்கு.
நானும் பள்ளிப்பருவத்துக்கு சென்று மீண்டேன். ”ஒருவர் கிடக்கவும், இருவர் இருக்கவும் மூவர் நிற்கவும்” என முதல் மூன்று ஆழ்வார்கள் பற்றிப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி நீங்கள் மிக சுவாரசியமாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
பாசுரங்களால் அங்கே கமழ்ந்த துளசியும் சுகந்தமும் இங்கேயும் கமழ்கிறது. :) 
நீங்கள் குறிப்பிட்ட திருப்பாவைப் பாடல்கள், பிரபந்தப்பாடல்களை நானும் பள்ளிப் பருவத்தில் கற்று மார்கழி மாதங்களில் அதிகாலை எழுந்து குழலூதும்  ஆயர்பாடிக் கண்ணன் படத்தின் முன் நின்று “ நீலா துங்கஸ்த நகிரி யும் “ “ அன்னவயல் புதுமை ஆண்டாள் அரங்கற்கு “ “ திருவாடிப் பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே “ பல்லாண்டு பல்லாண்டு “ “ மார்கழித் திங்கள்” “ ஓங்கி உலகளந்த “ என்று அரங்கன் அமுதத்தில் துளைந்தாடி உள்ளேன். எனவேதான் உங்கள் பகிர்வுகளின் மேல் இனந்தெரியாத ஈர்ப்பு.
ஆழ்வார் பாடல்களின் சிறப்பு நம்மையும்  அரங்கனுள் ஆழ்த்திவிடுவதுதான்.. உங்கள் கட்டுரையில் ஆழ்வார்களின் சிறப்பையும் அவர்கள் அரங்கனுக்கும் தமிழுக்கும் ஆற்றிய தொண்டையும் ( எவ்வளவு பாடல்கள், யார் யார் பாடியுள்ளார்கள் என்று ) படித்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு அரங்கன் உலா நம்முள்ளே நிகழ்ந்து விடுகிறது.
என்னை போலப் பலரும் தமக்குத் தெரிந்த ஆழ்வார் பாடல்களை நினைவுக்குக் கொண்டு வந்து உச்சரித்திருப்பார்கள். :) 
நன்றி சுமிதா சூடிக்கொடுத்த சுடர்கொடி போல என் வலைத்தளத்துக்காக அரங்கனைச் சூடி ஆழ்வார்களை மாலைகளாக்கித் தொடுத்து அளித்தமைக்கும்., இந்த சனிக்கிழமையை அரங்கனுக்கு அர்ப்பணித்த சிறப்புக்கும்.  வாழ்க வளமுடன். 
மிகுந்த மகிழ்ச்சிப்பூக்களை மேலே அள்ளித்தெளித்ததுப்போல இருந்தது !
நன்றியுடன் இந்தப்பதிவை முடிக்கிறேன்!

தேனம்மை அவர்கள் வலைப்பூ முகவரி , தெரியாத புதியவர்களுக்கு

No comments:

Post a Comment