Monday 20 July 2015

திருமாலை பாசுரம் -4 .

திருமாலை அறிவோம்
திருமாலை பாசுரம் -4 .
மொய்த்தவல்வினையுள் நின்று மூன்றெழுத்துடையபேரால்
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான்
இத்தனையடியனார்க்கு இரங்கும்நம்மரங்கனாய
பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுட்பிணங்குமாறே ..
திருமாலை தொண்டரடிபொடியாழ்வாரால் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின் மேல் எழுதப்பட்ட பாசுரங்கள். நாம் படித்து , ஓரளவு தெரிந்து வருகிறோம் பாசுரங்களை .
இன்று இந்த பாசுரம் பார்க்கலாம்.
விளக்கம்...
மொய்த்தவல்வினை - நம்மை சுற்றி படர்ந்துள்ள பல காலமாகக்கொண்ட வலிமையான வினைகள்-பாபங்கள் ,
மூன்றெழுத்துத்துடைய பேரால் - கோவிந்த என்ற மூன்றெழுத்துடைய திரு நாமத்தால்,
கத்திரபந்துமன்றே - தனது கீழான செயல்களால் தகுதியற்றவனான கத்திரபந்து என்பவனும்
பராங்கதி கண்டு கொண்டான் - உயர்ந்த நிலையான வைகுந்த பதவி (மோட்சம்) கொண்டான் ,
இத்தனை அடியனார்க்கு இரங்கும் நம் அரங்கனாய - இந்தளவுக்கு பக்தியை காண்பித்ததும் இறங்கிடும் நமது அரங்கனை
பித்தனைப்பெற்றுமந்தோ - பித்தனாகப்பெற்றும் (வைகுந்தத்தை விட்டு , தன் நிலை விட்டு இறங்கி அடியார்க்காக இறங்கிய பித்தன் )
அந்தோ ...(அய்யகோ)
பிறவியுட்பிணங்குமாறே - அறியாமல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவியில் (பிணங்கி ) ,உழல்கின்றனரே !
முதலில் வந்த பாசுரங்களில் திருமாலின் திரு நாமம் கூறுவதன் பெருமையையும் , அதனால் கிடைக்கும் நன்மையையும் பாடிய ஆழ்வார் , இப்பாசுரத்தில் நமக்காக இறங்கி பாடி அரற்றியுள்ளார்.
நம்மால் சுலபமாக தீர்க்கமுடியாத வலிமையான பாபங்களால் சூழப்பட்டு , மூன்றெழுத்து உடைய திரு நாமத்தை சொன்ன மகிமையால் , கத்திர பந்து என்ற கீழான செயல்களை செய்தவனும் உயர்ந்த வைகுந்த பதவி-மோட்சம் பெற்றான் .
எத்தனை குற்றங்கள் செய்திருந்தாலும் இந்தளவுக்கு சாதாரண திரு நாமம் கூறும் பக்திக்கும் இறங்கும் ,
மிக உயர்ந்த வைகுந்தத்தை விட்டு நம் பொருட்டு(நாம் முன் செய்த பாபத்தை மறந்து ) பித்தனாக திருவரங்கத்தில் கிடக்கும் நம் அரங்கனைப்பெற்றிருந்தாலும் ஐயகோ இதென்ன கொடுமை, மறுபடி மறுபடி பிறவி பெறுகின்றானே !
ஆழ்வார் மிகுந்த சுலபமான வழியாக இறைவனை அடைய , அவரது திரு நாமத்தை கூறி உயர்ந்த பதவியடையாமல் , மீண்டும் மீண்டும் பிறக்கின்றாரே என்று நமக்காக கூறுகிறார் பாசுரத்தில்.
ஏன் , அவசியமா , அவருக்கு தெரிந்தது மார்க்கம் போதுமே! , அடுத்தவர்க்கும் சொல்வது அவசியமா என்றால்...
ஆம் உண்மையான வைணவர்கள் அடுத்தவர் படும் துயர் கண்டு கலங்கி , உடன் விரைந்து அவர்க்கு தன்னாலான உதவியை செய்வர்.
அப்படியே ஆழ்வாரும் சம்சார வாழ்வில் வாழும் சாதாரண மனிதர்களின் நிலைகண்டு வருந்தி , அந்தோ...என பரிதாபப்பட்டு ,
அத்தனை கீழான கத்திர பந்து என்பவனுக்கு பெருமாள் மீண்டும் பிற்வா நிலையாகிய மோட்சத்தை அருளினார் கோவிந்த எனும் மூன்றெழுத்தை கூறிய படியால் .
நமக்காக இரங்கி அர்ச்சாவதார மூர்த்தியாக திருவரங்கத்தில் இருக்கும் அரங்கன் இருக்க , நாம் அவரது திரு நாமத்தைக்கூறி உயர் நிலை அடையாமல் , மீண்டும் மீண்டும் பிற்வி என்னும் துன்பத்தில் சிக்கி சுழல்கிறோமே ..என வருந்துவதாக பெரியோர்கள் கூறுகின்றனர் .
இன்று வைகுண்ட ஏகாதசி , திரு மாலுக்கு உகந்த தினம் , அவரது திரு நாமத்தை பாடியும் , அவரை நினைத்தும், விரதம் இருக்க அவரது அருளால் பாப கர்மாக்களில் இருந்து விடுபடலாம் .
அரங்கன் திருவடிகளே சரணம்.

No comments:

Post a Comment