Monday 20 July 2015

திருமாலை - 3.

திருமாலை அறிவோம்.
திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருமாலை தொண்டரடிபொடியாழ்வாரால் இயற்றப்பட்டது திருவரங்கன் மேல் .
பாசுரம்
- 3.
வேதநூற்பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப்போகும் நின்றதிற்பதினையாண்டு
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம்
ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமா நகருளானே !
விளக்கம் ...
வேதங்களில் நூறு ஆண்டுகள் மனிதர்களின் ஆயுட்காலம் என்றிக்க , மனிதர்கள் ஒரு வேளை நூறு வயது பெற்றால் , பாதி 50 ஆண்டுகள் உறக்கத்திலும் ,
மீதி பதினையாண்டுகளில் (ஐந்து பத்தாண்டுகளில் ) பேதை , பாலகன் என அறியப்படும் இளமைப்பருவத்தில் விளையாட்டிலும் , அறியாமலும் ,
மீதம் நோய் , பசி , துன்பமாகிய மரணத்துடன், பகவானைப்பற்றி தெரியாமல் முடிகிறது . ஆதலால் உன் திரு நாமம் சொல்ல இயலாத இப்பிறவி வேண்டாம் அரங்கம் எனும் நகரில் வாழும் பெருமாளே !
இதில் ஆழ்வார் தேவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் ஆகையால் மனிசர் தாம் ..என்று மனிதர்களுக்கான ஆயுளாக 100 ஆண்டுகளை குறிப்பிடுகிறார். இங்கு தேவர்களிடமிருந்து நம்மை வித்யாசப்படுத்தி காட்டுகிறார்.
சென்ற பாசுரங்களில் இறைவனின் பெயர்கள் கூறுவதால் ஏற்படும் நன்மைகளையும்..அதனால் தனக்கு வைகுண்டமே வேண்டாம் என்றும் வேண்டினார்
இந்த பாசுரத்தில் , இப்பிறவியே வேண்டாம் என்கிறார்.. இதற்கு பெரியோர்களது விளக்கம் , வைகுண்டம் இறந்ததும் செல்லக்கூடியது , பூலோகத்தில் வசிப்பவர்களுக்கு வைகுண்டமாக விளங்குவது திருவரங்கம் , ஆகையால் திருவரங்கத்தில் , நெருங்கி அரங்கனுடன் சம்பந்தப்பட்டு அவரது திரு நாமத்தைப்பாடியபடியே வாழும் பிறவி வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
திருமாலையில் அரங்கன் ஆழ்வாரை எழுப்புவதாகவும் , திருப்பள்ளியெழுச்சியில் ஆழ்வார் அரங்கனை எழுப்புவதாகவும் கொள்ளப்படுகிறது ..
இனி அடுத்து வரும் பாசுரங்களில் காண்போம் மீண்டும் அரங்கனையும் , ஆழ்வாரையும்...

No comments:

Post a Comment