Monday 20 July 2015

** பாசுரம் -9.

திருமாலை அறிவோம்..
சோழ நாட்டில் விப்ர நாராயணர் என்ற திருப்பெயர் கொண்டவர் தாசியால் மாறி பின் திருவரங்கனுக்கு தொண்டு புரிந்து "தொண்டரடிப்பொடியாழ்வார் " ஆக ஆனவர்.
இவர் அழகு தமிழிலே இயற்றியவை திருமாலை (45) , திருப்பள்ளியெழுச்சி (10) .
இவை நாலாயிர திவ்யப்பிரபந்தம் எனும் வைணவ இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன..அதிலுள்ள இறைத்தமிழை அனுபவித்து வருகிறோம்.இனி பாசுர விளக்கம் காண்போம்.
** பாசுரம் -9.
மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர்
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை
கழலிணை பணிமி னீரே.
--------()----------
* கற்றினம் மேய்த்தவெந்தை - கன்றுகளோடு கூடிய மாடுகளை மேய்த்த
( எந்தை) என் தெய்வம்
கழலிணை பணிமின்நீரே -
கண்ணனை பற்றிக்கொள்ளுங்கள்
மதியிலா மானிடங்காள் - மதியற்றவர்களாகளான (எந்த அறிவு வேண்டுமோ அது அற்ற ) மானிடர்களே !
மற்றுமோர் தெய்வமுண்டே !?
மற்றுமொரு தெய்வம் உண்டோ ?! - ( இல்லை என்றும் )
உற்ற போதன்றி - உற்ற தெய்வமாக பற்றியிருப்பவர் அன்றி
நீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர் -
வேறெருவரை பர தெய்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் அவர்களாக வந்து சரணடந்தால் ஒழிய
அற்றமேலென்றறயீர் - வேதத்திற்கும் மேலான அறுதியான தாத்பர்யமான பரம்பொருளை அறிய மாட்டீர்கள்..
அவனல்லால் தெய்வமில்லை -
முந்தைய என் பாசுரங்களில் நான் தெரிவித்து வரும் பரதெய்வம் நாராயணன் தவிர பிற தெய்வமில்லை என்பதையும்..!
*** பாசுர விளக்கம். ***
முந்தைய பாசுரத்தில் சிலையினால் வென்ற தேவனே தேவனாவான் என்று ஆழ்வார் , அம்பினால் இலங்கையை வென்ற ஒருவன் அவன் ராமனே தேவனாவான்.
அவன் ' சக்ரவர்த்தி, காண்பதும் கடினம் , அவரை பின்பற்றுவதும் கடினம் முற்பட்ட காலம் ' என்பவர்களே !
அதற்கு பின் வந்த கன்றுகளை மாடுகளுடன் மேய்த்த எங்கள் கண்ணனின் பாதம் பணிந்து உற்ற தெய்வம் இவனென்று ஏற்றுக்கொள்ளுங்கள் !
எந்த அறிவு , ஞானம் தேவையோ அது தவிர வேண்டாததெல்லாம் அறிந்து வைத்திருக்கும் மானிடர்களே !!
என்னால் கூறப்பட்ட தெய்வத்தை தவிர மற்றுமோர் தெய்வமுண்டோ..இல்லை..!
நீங்கள் எந்தெந்த தெய்வங்களை பற்றியிருக்கிறீர்களோ அவர்களே ஒரு துன்பம் எனில் பரதெய்வமாகிய நாராணனை சரண் புகுந்தால் ஒழிய அவரே உற்ற தெய்வம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் .
வேதத்திற்கும் மேற்பட்ட வேதாந்தம் எனும் அறுதியான பொருள் கொண்டதை அறியாமல்..வேதங்கள் கூறியப்படி தேவதைகளுக்கு பூஜை செய்து அவர்களே நம் தெய்வம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் ! உணருங்கள் !
நாராயணன் ஒழிய உற்ற தெய்வம் வேறில்லை "
என்று ஆழ்வார் உரைக்கிறார்.
இதில் ஆழ்வார் தொடர்ந்து ஏன் அவர் திருவரங்கம் வாழ் அரங்கனை துதிக்கிறார் என்றும்..ஒரே தெய்வம் அவரே என்றும் தம் பக்தியை விளக்கி அனைவருக்கும்..தான் பெற்ற ஞானம் கிடைக்க செய்கிறார்..
ஆழ்வாரின் பாதம் பணிந்து ..அடுத்த பாசுரம் காண்போம்...

அறிவோம் திருமாலை - பிரபந்தம் .- 8


திருமண்டகக்குடியை பூர்வீகமாகக்கொண்ட சாத்வீகமான , தேவதேவி என்ற நாட்டிய அழகியால் வசீகரிக்கப்பட்டு அதன் மூலம் மரண தண்டனை வரை சென்ற விப்ர நாராயணன் எனும் வைணவ அடியார் , பின் தொண்டர்களின் பாதத்துளி மண் ஒற்றி அவர்களுக்கு சேவை செய்ய தொண்டரடி பொடியாழ்வார் ஆகி..அவர் இயற்றிய பக்தி இலக்கியங்கள் திருமாலை (45) - திருப்பள்ளியெழுச்சி ( 10) பக்தி இலக்கியங்கள் படைத்து அவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மை உய்விக்கின்றன.
தமிழமுதம் பருகுவோம்..! பக்தி கலந்து.

திருமாலை -8 .

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பனகள் பேசில் போவதே
நோயதாகி குறிப்பென கடையுமாகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே !
பாசுர விளக்கம்.
வெறுப்பொடு - (இறைவனின் மேன்மையை கேட்கவும் பெறாத) வெறுப்போடு
சமணர் - ஜைனர்கள்
முண்டர் - தலையில் மொட்டையடித்துக்கொண்டு வாழ்ந்த சைவர்கள்
விதி இல் - பாக்கியமற்ற -விதியில்லா
சாக்கியர்கள் - பௌத்தர்கள்
நின் பால் - உன் விஷயத்தில்
பொறுப்பு அரியன கள் - பொறுக்க இயலாத சில வார்த்தைகள்
பேசில் - பேசுவார்களே ஆயின்
அதுவே நோய் ஆகி - அந்த நிந்தைகளை கேட்பதே வியாதியாகி
போவது - வாழ்வே முடிந்துப்போவது
குறிப்பென அடையுமாகில் - அந்த குறிப்பு எனக்கு கிடைத்து (சந்தர்ப்பம் வாய்த்தால் )
கூடுமேல் ஆங்கே - எனக்கு சக்தியும் கூடு மாகில் உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
தலையை அறுப்பதே கருமம் கண்டாய் - தலையை கொய்வதே செய்யக்கூடிய வேலை யாக இருக்கும்..அதையும் நீயே காண்பாய்..நீயே செய்ய வேண்டும்..
திருவரங்க நாதனின் மேல் பேரும் பக்திக்கொண்ட ஆழ்வார்..ராம நாம மகிமையையும் , இறை பக்தியின் வலிமை , மனிதர்கள் புரியாமல் வாழ்கிறார்களே என்ற தன் ஆதங்கத்தையும் சென்ற பாசுரங்களில் தெரிவித்தவர்..இப்போது இறைவனை தூற்றுபவர்கள் , நாத்திகர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.
திருமழிசையாழ்வார் , திரு மங்கையாழ்வார் முதலியோர் கடுஞ்சொற்கள் உபயோகித்தால் ஏற்க இயலும், ஆனால் பரம சாத்வீக குண சீலரான தொண்டரடிப்பொடியாழ்வார் இங்கனம் குறிப்பிடுவது அக்காலத்தில் இருந்த மற்ற மதங்களின் ஆளுமைகள் மனிதர்களின் செயல்கள் எழுதத்தூண்டியிருப்பன என அறிய முடிகிறது.
இறைவனை ஏற்காது அவன் பால் வெறுப்பை உமிழ்பவர்கள் , தலையில் மொட்டையடித்துக்கொண்டு இருந்த சைவர்கள் , வேதமென்பதையும் , இறைவனையும் ஏற்காத - விதியில்லா பௌத்தர்கள் உன்னைப்பற்றி பொறுக்க இயலாத சில வார்த்தைகளை கூறுவார்களே ஆயின்..முதலில் நான் அவ்விடம் விட்டு நகர வேண்டும் , நகர முடியா சூழ் நிலையில் அவ்வார்த்தைகளை கேட்பதே எனக்கு நோயாகி நான் அவ்விடமே உயிர் விடுதலும் வேண்டும்..அப்படி இல்லையெனில் எனக்கு அவர்களின் பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்குமெனில் அவர்களின் தலையை அறுப்பதே நான் செய்யத்தக்க செயலாகும்.
அதையும் நீயே செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் அரங்க மா நகரில் வாழும் ரெங்க நாதனே !
இது ஆழ்வாரது சூழ் நிலையையும் , ஒரு சாத்வீகர் தான் கொண்ட பக்தியில் எத்துணை உறுதியாக இருக்கவேண்டும் , இறைபக்தியின் மேன்மயையும் விளக்குகிறது.
இதற்கு பல விளக்கங்கள் நம் முன்னோர்களால் தரப்பட்டுள்ளது..அவற்றை பதிவின் நீளம் கருதி வெளியிட வில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு..
அரங்கனின் அருள் வேண்டி , ஆழ்வாரின் பாதம் போற்றி அடுத்தப்பாசுரம் காண்போம்.

திருமாலை -7.

தொண்டரடிப்பொடியாழ்வார்
திருமாலை -7.
தொண்டரடிப்பொடியாழ்வார் சோழ நாட்டில் பிறந்து தந்த தமிழ் பக்தி இலக்கியங்கள் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி .இவையிரண்டுமே திருவரங்கம் வாழ் அரங்கனை, ஸ்ரீ ரெங்க நாதரை பாடியவை.
முன்பு பார்த்த 6 பாசுரங்களிலும் பார்த்து வருகிறோம் ஆழ்வாரின் பர பக்தியையும் , அவர் நமக்கு கூறும் நாம மகிமைகளையும். இனி இன்றைய பாசுரம் காண்போம்.

பாசுரம்..
புலையறமாகிநின்ற புத்தொடுசமணரெல்லாம்
கலையறக்கற்ற மாந்தர் காண்பரோகேட்பரோதாம் ?
தலையுறுப்புண்டும் சாகேன் சத்தியங்காண்மின் ஐயா !
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான் .


பாசுர விளக்கம்..
கலையறகற்ற மாந்தர் -
வேத சாஸ்திரங்களை நன்கு சந்தேகமின்றி கற்ற மாந்தர் ,
புலையறமாகிநின்ற புத்தோடு சமணரெல்லாம் - நீச தர்மம் (பரப்பொருள் உண்டு என்பதையும் , வேதங்களை ஏற்காமல் , தானே தெய்வம் என்றும் தர்மமின்றி இருந்த மதங்கள்) கொண்ட புத்த , சமண மதங்களை கண்களைக்கொண்டு காண்பாரோ இல்லை காதால் கேட்டு ஆராய்ச்சி செய்வாரோ..?
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான் - தன் வில்லாலேயே தர்மத்தின் வழியில் இலங்கையையும் , அதன் அரசன் இராவணனையும் வென்ற ராமனே தேவர்களுக்கெல்லாம் தேவன் ஆவான்..

தலையறுப்புண்டும் சாகேன் சத்தியங் காண்மின் ஐயா..
என் தலை அறுத்தாலும் நான் சாக மாட்டேன் இது சத்தியமாகும்..

தொண்டரடி பொடியாழ்வார் , சென்ற பாசுரங்களில் நாம மகிமையையும் , ரெங்கா என்ற நாமம் கூற தவறியவன் பிணத்தை பறவையும் முகர்ந்துப்பார்க்காது என்று கூறியவர்..

இப்பாசுரத்தில் , ஸ்ரீ ராமரது பெருமையை கூறி ..அவரே தேவர்களுக்கெல்லாம் தேவனாகிறார்..என்றும் அதை தான் தலையறுத்துக்கொண்டாலும் சாக மாட்டேன் என தன் மீதே சத்தியம் செய்து , நன்கு வேத சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தவர்கள்..அன்று இருந்த புத்த , ஜைன மதங்களை கண்களால் கண்டோ , கேட்கவோ மாட்டார்கள்..என்கிறார்..

அன்றைய காலக்கட்டத்தில் இருந்த மதங்கள் அதனால் மனிதர்கள் பட்ட பாடு பல சரித்திரங்களில் அறியப்பெறுகிறோம்.
இது ஆழ்வாரின் தர்மத்தில் சிறந்த ஸ்ரீ ராமனே உற்ற தெய்வம் என்று தன் கூற்றையே ஆணித்தரமாக உணர்த்தும் பாசுரமாக கொள்ளலாம்.
இனி அடுத்த பாசுரம் நோக்கி செல்வோம்..
அரங்கனின் அருளோடு, ஆழ்வாரின் பதம் பற்றியே..

திருமாலை -6 .

திருமாலை அறிவோம்...
சோழ நாட்டில் பிறந்தவர் ..தொண்டர்களின் பாதத்துளி , அடியொற்றி..சேவை செய்த விப்ர நாராயணர் நம் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார்..
அவர் பாடியவை..திருமாலை , திருப்பள்ளியெழுச்சி... ரெண்டுமே திருவரங்கம் வாழ் அரங்கன் மேல் எழுதியவை...
சிறிது இடைவெளி பிறகு..தொண்டரடிபொடியாழ்வரது திருமாலையை தொடர்கிறோம் ...
சற்றே.. மன்னித்து தொடரலாமா...



திருமாலை -6 .
மறஞ்சுவர்மதிளெடுத்து மறுமைக்கே வெறுமைப்பூண்டு
புறஞ்சுவரோட்டைமாடம் புரளும் போதறிய மாட்டீர்..
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார்க்காட்செய்யாதே
புறஞ்சுவர் கோலஞ்செய்து புட்கௌவக்கிடக்கின்றீரே ...
இனி பாசுரம் காண்போம்..
மறம் சுவர் மதிளெடுத்து - தீய செயல்களால் , எண்ணங்களால் ஆன சுவர் , மதிலாக எழுப்பி ...
மறுமைக்கே வெறுமைபூண்டு - மீண்டும் சரீரம் பெறா . வாழ்விற்கு தேவையான வற்றை பெறாமல்..வெறுமையைக்கொண்டு ..
புறம் சுவர் ஓட்டை மாடம் - வெளியே சுவராகதெரியும் நிலையில்லா உடல்
புரளும்போது அறிய மாட்டீர் - தரையில் விழும் காலத்தை அறிய மாட்டீர்கள்..
அறம் சுவர் ஆகி நின்ற - தர்மம் , அறத்தையே சரீரமாகக்கொண்ட
அரங்கனார்க்கு ஆட்செய்யதே - அரங்கனுக்கு அடிமையாக இல்லாமல்.
புறம் சுவ்ர் கோலம் செய்து - வெளியே தெரியும் சரீரத்தை அலங்கரித்து..
புள் கௌவக்கிடக்கின்றீரே - பறவைகள் கவ்விக்கொள்ளும் படி கிடக்கின்றீரே...
பாசுர விளக்கம்..
சாத்வீகமான , நல்ல குணங்களுடன் யாரும் நம்மை நெருங்கிட முடியாதபடி ,
தீய குணங்களால் ஒரு சுவர் எழுப்பிக்கொண்டு அதையே அரணாகக்கொண்டு ,
மீண்டும் பிறக்காதவண்ணம்... அவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் (பக்தி) சேர்க்காமல் , வெளியே தெரியும் சரீரம்..உடலுக்கு...அலங்காரம் , ஆபரணங்கள் சேர்த்து செய்து கொள்கிறீரே...
அறமாகிய , தர்மத்தையே தனது சரீரமாக , உடலாகக்கொண்ட அரங்கனுக்கு சேவை செய்யாமல்..பக்தியுடன் இல்லாமல் இருப்பின்.. இவ்வுடல் இறந்ததும்..கீழே விழும்போது பறவைகள் கூட உண்ணாமல்..கவ்வியே பார்க்க..கிடக்கின்றீரே...
ஆழ்வார் .இங்கு..மனித வாழ்வில் , மறுமைக்காக நம் பால் உள்ள அன்பால் , கவலையுற்று , நம்மை விடுவிக்க , இப்பாசுரம் தருகிறார்..
வீணே அழியக்கூட வெளியே தெரியும் உடலுக்கு..வாசனை திரவியம் , ஆபரணங்கள் , உணவு என்று பார்க்கும் நாம் , மறு பிறப்பு இல்லாமல் செய்வதற்கான காரியங்களை செய்யாமல் , அரங்கனின் மேல் பக்திக்கொள்ளாமல் இருந்தால்..ஆத்மா பிரிந்து சரீரம் கீழே விழுந்தால்...பறவைகள் கூடகொத்தாமல்..கவ்விப்பார்க்கும்...ஆகையால் அத்தகைய இழிவான சரீரத்தை விட்டு , அரங்கன் மேல் பக்திக்கொண்டு..மறுமைக்கு வழி தேட சொல்கிறார்....
தொடர்ந்து அனுபவிப்போம்..அடுத்தடுத்து...

திருமாலை -5

பிரபந்தம் அறிவோம்..

பெண்டிராற்சுகங்களுப்பான் பெரியதோரிடும்பைபூண்டு
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கேகரைந்துனைந்து
தண்துழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே !!
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் தொண்டரடிபொடியாழ்வாரின் திருமாலை காண்கிறோம் இங்கேப்பதிவாக..சற்றே இடைவெளியில் மீண்டும்..என்னுடன் படித்து பயணிக்க வேண்டுகிறேன் !
தொண்டரடிபொடியாழ்வார் எழுதியவை ரெண்டு..ஒன்று திருமாலை & திருப்பள்ளியெழுச்சி ..திருவரங்கம் வாழ் அரங்கனைப்பற்றி எழுதியது..
இந்த பாசுர விளக்கம்..காண்போம்.
பெண்களால் கிடைக்கும் சுகங்களில் உழன்று வாழ்பவன் , பெரிய பெரிய துன்பங்களை தானே விரும்பி தன் தோளில் அணிகலனாய் அணிகிறான் .
இவன் உணவிற்காக பகல் முழுவதும் உழைத்து விட்டு இரவில் உண்டு அப்படியே உறங்க அந்த உடலுக்காகவே கரைந்தும் , நைந்தும் போகிறான்....
தம்மிடம் அடியார்கள் என்றே பணிந்த தம் பக்தர்களுக்காக அழகான வன மாலையை அணிந்து சர்வேஸ்வரனாக காட்சியளிக்கும் அரங்கனை..பாடி ஆடி , அவருக்கு தொண்டு செய்யும் அமுதத்தை உண்ணாமல்...வெறும் சோற்றை உண்டு வாழும் பாவியாக, வீணர்களாக வாழ்கிறார்களே !
இதில் ஆழ்வார்...காம சுகத்தால் எப்போதும் நன்மை விளைவதில்லை மாறாக..பகுத்தறிவு கொண்டு இறைவன் மேல் பக்தி கொள்ளுங்கள் என்கிறார் . உணவு , உடல் , காமத்திற்கு இடம் கொடாமல்..
நமக்காகவே வனமாலை தரித்த மார்பனாகிய அரங்கனை அடித்தொழ , அவர் நம் பாபங்களை ப்போக்கி..நம்மை உயர்த்துகிறார்..
இதை யறியாமல் வெறும் சோறு ண்டு , பாபிகளாக , நீசர்களாக வாழ்கின்றனரே ..என்று நம்பால் இரக்கம் கொண்டு உய்க்கும் வழி உரைக்கிறார்...

திருமாலை பாசுரம் -4 .

திருமாலை அறிவோம்
திருமாலை பாசுரம் -4 .
மொய்த்தவல்வினையுள் நின்று மூன்றெழுத்துடையபேரால்
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான்
இத்தனையடியனார்க்கு இரங்கும்நம்மரங்கனாய
பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுட்பிணங்குமாறே ..
திருமாலை தொண்டரடிபொடியாழ்வாரால் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட அரங்கனின் மேல் எழுதப்பட்ட பாசுரங்கள். நாம் படித்து , ஓரளவு தெரிந்து வருகிறோம் பாசுரங்களை .
இன்று இந்த பாசுரம் பார்க்கலாம்.
விளக்கம்...
மொய்த்தவல்வினை - நம்மை சுற்றி படர்ந்துள்ள பல காலமாகக்கொண்ட வலிமையான வினைகள்-பாபங்கள் ,
மூன்றெழுத்துத்துடைய பேரால் - கோவிந்த என்ற மூன்றெழுத்துடைய திரு நாமத்தால்,
கத்திரபந்துமன்றே - தனது கீழான செயல்களால் தகுதியற்றவனான கத்திரபந்து என்பவனும்
பராங்கதி கண்டு கொண்டான் - உயர்ந்த நிலையான வைகுந்த பதவி (மோட்சம்) கொண்டான் ,
இத்தனை அடியனார்க்கு இரங்கும் நம் அரங்கனாய - இந்தளவுக்கு பக்தியை காண்பித்ததும் இறங்கிடும் நமது அரங்கனை
பித்தனைப்பெற்றுமந்தோ - பித்தனாகப்பெற்றும் (வைகுந்தத்தை விட்டு , தன் நிலை விட்டு இறங்கி அடியார்க்காக இறங்கிய பித்தன் )
அந்தோ ...(அய்யகோ)
பிறவியுட்பிணங்குமாறே - அறியாமல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவியில் (பிணங்கி ) ,உழல்கின்றனரே !
முதலில் வந்த பாசுரங்களில் திருமாலின் திரு நாமம் கூறுவதன் பெருமையையும் , அதனால் கிடைக்கும் நன்மையையும் பாடிய ஆழ்வார் , இப்பாசுரத்தில் நமக்காக இறங்கி பாடி அரற்றியுள்ளார்.
நம்மால் சுலபமாக தீர்க்கமுடியாத வலிமையான பாபங்களால் சூழப்பட்டு , மூன்றெழுத்து உடைய திரு நாமத்தை சொன்ன மகிமையால் , கத்திர பந்து என்ற கீழான செயல்களை செய்தவனும் உயர்ந்த வைகுந்த பதவி-மோட்சம் பெற்றான் .
எத்தனை குற்றங்கள் செய்திருந்தாலும் இந்தளவுக்கு சாதாரண திரு நாமம் கூறும் பக்திக்கும் இறங்கும் ,
மிக உயர்ந்த வைகுந்தத்தை விட்டு நம் பொருட்டு(நாம் முன் செய்த பாபத்தை மறந்து ) பித்தனாக திருவரங்கத்தில் கிடக்கும் நம் அரங்கனைப்பெற்றிருந்தாலும் ஐயகோ இதென்ன கொடுமை, மறுபடி மறுபடி பிறவி பெறுகின்றானே !
ஆழ்வார் மிகுந்த சுலபமான வழியாக இறைவனை அடைய , அவரது திரு நாமத்தை கூறி உயர்ந்த பதவியடையாமல் , மீண்டும் மீண்டும் பிறக்கின்றாரே என்று நமக்காக கூறுகிறார் பாசுரத்தில்.
ஏன் , அவசியமா , அவருக்கு தெரிந்தது மார்க்கம் போதுமே! , அடுத்தவர்க்கும் சொல்வது அவசியமா என்றால்...
ஆம் உண்மையான வைணவர்கள் அடுத்தவர் படும் துயர் கண்டு கலங்கி , உடன் விரைந்து அவர்க்கு தன்னாலான உதவியை செய்வர்.
அப்படியே ஆழ்வாரும் சம்சார வாழ்வில் வாழும் சாதாரண மனிதர்களின் நிலைகண்டு வருந்தி , அந்தோ...என பரிதாபப்பட்டு ,
அத்தனை கீழான கத்திர பந்து என்பவனுக்கு பெருமாள் மீண்டும் பிற்வா நிலையாகிய மோட்சத்தை அருளினார் கோவிந்த எனும் மூன்றெழுத்தை கூறிய படியால் .
நமக்காக இரங்கி அர்ச்சாவதார மூர்த்தியாக திருவரங்கத்தில் இருக்கும் அரங்கன் இருக்க , நாம் அவரது திரு நாமத்தைக்கூறி உயர் நிலை அடையாமல் , மீண்டும் மீண்டும் பிற்வி என்னும் துன்பத்தில் சிக்கி சுழல்கிறோமே ..என வருந்துவதாக பெரியோர்கள் கூறுகின்றனர் .
இன்று வைகுண்ட ஏகாதசி , திரு மாலுக்கு உகந்த தினம் , அவரது திரு நாமத்தை பாடியும் , அவரை நினைத்தும், விரதம் இருக்க அவரது அருளால் பாப கர்மாக்களில் இருந்து விடுபடலாம் .
அரங்கன் திருவடிகளே சரணம்.

திருமாலை - 3.

திருமாலை அறிவோம்.
திராவிட வேதமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருமாலை தொண்டரடிபொடியாழ்வாரால் இயற்றப்பட்டது திருவரங்கன் மேல் .
பாசுரம்
- 3.
வேதநூற்பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப்போகும் நின்றதிற்பதினையாண்டு
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம்
ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமா நகருளானே !
விளக்கம் ...
வேதங்களில் நூறு ஆண்டுகள் மனிதர்களின் ஆயுட்காலம் என்றிக்க , மனிதர்கள் ஒரு வேளை நூறு வயது பெற்றால் , பாதி 50 ஆண்டுகள் உறக்கத்திலும் ,
மீதி பதினையாண்டுகளில் (ஐந்து பத்தாண்டுகளில் ) பேதை , பாலகன் என அறியப்படும் இளமைப்பருவத்தில் விளையாட்டிலும் , அறியாமலும் ,
மீதம் நோய் , பசி , துன்பமாகிய மரணத்துடன், பகவானைப்பற்றி தெரியாமல் முடிகிறது . ஆதலால் உன் திரு நாமம் சொல்ல இயலாத இப்பிறவி வேண்டாம் அரங்கம் எனும் நகரில் வாழும் பெருமாளே !
இதில் ஆழ்வார் தேவர்களுக்கு ஆயுட்காலம் அதிகம் ஆகையால் மனிசர் தாம் ..என்று மனிதர்களுக்கான ஆயுளாக 100 ஆண்டுகளை குறிப்பிடுகிறார். இங்கு தேவர்களிடமிருந்து நம்மை வித்யாசப்படுத்தி காட்டுகிறார்.
சென்ற பாசுரங்களில் இறைவனின் பெயர்கள் கூறுவதால் ஏற்படும் நன்மைகளையும்..அதனால் தனக்கு வைகுண்டமே வேண்டாம் என்றும் வேண்டினார்
இந்த பாசுரத்தில் , இப்பிறவியே வேண்டாம் என்கிறார்.. இதற்கு பெரியோர்களது விளக்கம் , வைகுண்டம் இறந்ததும் செல்லக்கூடியது , பூலோகத்தில் வசிப்பவர்களுக்கு வைகுண்டமாக விளங்குவது திருவரங்கம் , ஆகையால் திருவரங்கத்தில் , நெருங்கி அரங்கனுடன் சம்பந்தப்பட்டு அவரது திரு நாமத்தைப்பாடியபடியே வாழும் பிறவி வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
திருமாலையில் அரங்கன் ஆழ்வாரை எழுப்புவதாகவும் , திருப்பள்ளியெழுச்சியில் ஆழ்வார் அரங்கனை எழுப்புவதாகவும் கொள்ளப்படுகிறது ..
இனி அடுத்து வரும் பாசுரங்களில் காண்போம் மீண்டும் அரங்கனையும் , ஆழ்வாரையும்...

திருமாலை அறிமுகம் .. பாசுரம் - 2

திருமாலை அறிமுகம் ..
பாசுரம் - 2
" பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே "
இந்த பாசுரம் பலரும் பரவலாக, பிரபலமாக அறிந்தது . தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலையில் 2 ம் பாசுரம்.
முன்னரே அறிந்தோம் , விப்ர நாராயணன் எனும் இயற்பெயர் கொண்டவர் காமவசப்பட்டு , இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு , தொண்டரடிபொடியாழ்வார் என அழைக்கப்பட்டவர் . அவரது அவதார தினம் இன்று , அவரை சேவித்து, அவரின் அருளை வேண்டி அற்புதமான இந்த பாசுரத்தை அறிவோம்.
திருமாலை.., அரங்கம்...ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும், திருமால் அரங்கனின் மேல் இயற்றப்பட்டவை, அவர் ஆழ்வாரை பிறவியினால் கிட்டிய கர்மங்களிலிருந்து எழுப்புவதாக பாசுரங்கள் அமைந்ததாகவும் அறிந்தோம்..
இனி..பாசுர விளக்கம்.....
"திருவரங்கம் எனும் நகரில் வாழும் அரங்கனே !
பச்சைப்பசேல் என பெருத்திருக்கும் , மரகத மலைப்போன்ற திருமேனியையும் , அதன் நடுவே பவளம் போன்ற சிவந்த அதரங்களையும் (உதடு-வாய்) ,
தாமரைப்பூ போன்ற சிவந்த கண்களையும் கொண்டவரே ,
அச்சுதனே ! (நழுவுதல் இல்லாதவன்) (அவரது திருமேனி எப்போதும் ஒரே மாதிரி இருப்பது , மலை மாறலாம் , பவளமும், தாமரையும் அழியலாம் ..ஆனால் இவையெல்லாம் அங்கமாகக்கொண்ட திருமால் அழிவில்லாதவர் என்ற பொருள் )
தேவர்களுக்கெல்லாம் தலைவரே !
அனைத்திற்கும் முதல்வனாக இருந்தும் , சாதாரண மனிதனாக ஆயர்குலத்தில் வந்து பிறந்த , குலக்கொழுந்தே! ,
உன் திரு நாமம் பாடிக்கொண்டிருக்கும் இந்த சுவை(வாழ்வை) தவிர , எனக்கு , வைகுண்டத்தில் நின் அடியார்களுடன் கூடியிருந்து , நின்னுடனே களித்திருக்கும் அந்த சுவை(அனுபவம் ) நான் வேண்ட மாட்டேன்! "
இதில் நாம் கண்ட முதல் பாசுர த்தில்
( காவலிற் புலனை வைத்து ")
திரு நாமம் சொல்வதன் பெருமை யைக்கூறியவர் , அது எத்துணை இனிமையானது என்றும்
பல்வேறு பிறவிகளில் நாம் ஈட்டியுள்ள பாப கர்மங்களை அழிக்க வல்லது என்றும் , அதன் பலன்களை யும் சொல்கிறார் .
வைகுண்ட பதவியைவிட உசத்தியானது என்பதையும், அத்தனை இனிமையானது என்று இப்பாசுரத்தில் பாடுகிறார்..
( ஆண்டாளும் செங்கண் சிறிசிறிதே எம்மேல் விழியாயோ எனக்குறிப்பிடுகிறார்...அத்தகைய திரு விழிகள்...பக்தர்களுக்கு அருட்கொடையாகவும் , அசுரர்களுக்கு- தீயவர்களுக்கு எரித்திடும் கனல் கொண்ட சிவந்த பார்வையையும் கொண்ட செங்கண் எனக்குறிப்பிடுகின்றனர் ).
இன்றைய தினம்
பக்தியிலும் , பக்தர்களின் பாதத்துளியை தனது தலையில் ஏந்திய நிலையில் தொண்டர்க்கும் அடியாராக அவதரித்த ஆழ்வாரை எண்ணி, தொழுது ...அரங்கனிடம் அவர் முறையிட்ட , வேண்டியருளிய மற்ற பாசுரங்களையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்...